மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

ஓட்டுக்கு 1,000: தேனியில் அதிமுக பணப்பட்டுவாடா!

ஓட்டுக்கு 1,000: தேனியில் அதிமுக பணப்பட்டுவாடா!

தேனியில் அதிமுகவுக்கு ஓட்டுபோட வாக்காளர்களுக்கு ரூ.1,000 வழங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தேனி மக்களவைத் தொகுதியில் மூன்று முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தமிழக அளவில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. அதிமுக சார்பில் துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத்தும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். மூவரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனியில் பணத்தைக் கோடி கோடியாக இறைத்து வெற்றிபெற்று விடலாம் என்று அதிமுகவினர் எண்ணி வருவதாகக் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனும் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேனியில் அதிமுகவினர் இரட்டை இலைக்கு ஓட்டு போடுமாறு கூறி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 1,000 ரூபாய் பணம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் TN 60 AX 1451 என்ற எண்ணுடைய இருசக்கர வாகனம் ஒன்று இருக்கிறது. இது தேனி பெரியகுளம் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணாகும். இந்த ஓர் இடத்தில் மட்டும் அதிமுகவினர் பணம் கொடுக்கவில்லை; ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை தேனி மக்களவைத் தொகுதி முழுவதும் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர் என்று அமமுகவினர் கூறுகின்றனர்.

ஓட்டுக்கு 1,000 ரூபாய் வீதம் தேனி முழுவதும் 120 கோடி ரூபாயை அதிமுகவினர் ஒரே நாளில் விநியோகம் செய்துள்ளதாகவும், தேர்தல் ஆணையம் இதைப் பொருட்படுத்தாமல் அமைதி காப்பதாகவும் அமமுக வட்டாரத்தில் கூறுகின்றனர். அதேபோல, ஏப்ரல் 13ஆம் தேதி ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி, தேனி ஆண்டிபட்டியில் பிரச்சாரம் செய்த நிகழ்ச்சிக்காக ரூ.50 கோடி வரையில் ஓபிஎஸ் செலவு செய்ததாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தெரிந்திருந்தும் தேர்தல் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், “எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை செய்யும் வருமான வரித் துறையினர் ஓபிஎஸ் வீட்டில் சோதனை மேற்கொள்ளலாமே. தேனி தொகுதிக்கு 1,000 கோடி செலவு செய்யும் ஓபிஎஸ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “காவல் துறை வாகனங்களில் வைத்து பணம் கொண்டு செல்லப்படுகின்றன. அதைச் சாலைகளிலும், தெருக்களிலும் பகிரங்கமாகவே வைத்து பட்டுவாடா செய்து வருகின்றனர். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வெட்கக்கேடாக இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon