45 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவு: பாஜக எம்.பி

public

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 45 பேர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக எம்.பி தெரிவித்துள்ளார்.

288 சட்டப் பேரவைத் தொகுதிகளைக்கொண்ட மகாராஷ்டிரத்தில் பாஜக 105 தொகுதிகளையும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. பாஜக ஆட்சியமைக்க 146 இடங்கள் தேவை. எனினும் பாஜகவுக்கு ஆதரவளிக்க சிவசேனா விதித்த நிபந்தனையால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் பதவி குறித்து சிவசேனாவுக்கு நாங்கள் எந்த உறுதியும் வழங்கவில்லை என்றும், பாஜகதான் ஐந்து ஆண்டுகளுக்கும் ஆட்சியமைக்கும் எனவும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே நேற்று நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தானது.

இதனிடையே மகாராஷ்டிராவின் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பாஜக எம்.பி சஞ்சய் காக்டே, “சிவசேனா சார்பாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 56 எம்.எல்.ஏ.க்களில் 45 பேர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் தொடர்பில் இருக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி அரசு உருவாக வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இவர்களில் சிலர் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக ஏற்றுக்கொண்டு ஆட்சியமைக்க வேண்டுமென உத்தவ் தாக்கரேவை வற்புறுத்துவதாக நினைக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

பாஜகவிடம் ஆட்சியில் சம பங்கு கேட்டு சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நேரத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 45 பேர் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக சஞ்சய் காக்டே பேசியுள்ளது இரு கட்சிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக சட்டமன்றக் குழு உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்படவுள்ளார். இந்தக் கூட்டத்தில் முதலில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொள்வதாக இருந்தது. அப்படி கலந்துகொள்ளும்பட்சத்தில் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து பேசுவார் என்றும், அதன் மூலம் விரைவில் ஆட்சியமைக்கும் சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், “மும்பையில் நாளை நடைபெற உள்ள பாஜக சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நரேந்திர சிங் தோமர் மற்றும் அவினாஷ் ராய் கன்னா பங்கேற்பார்கள்” என்று அமித் ஷா அறிவித்துள்ளார். இதனால் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *