மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

கடலூர்: கரையைக் கடக்கப்போவது யார்?

கடலூர்: கரையைக் கடக்கப்போவது யார்?

கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதுபோல, மக்களவைத் தேர்தல் வெயிலின் உக்கிரமும் தமிழகம் முழுவதும் தகித்துக்கொண்டிருக்கிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியின் கள நிலவரங்களையும் தொடர்ந்து நாம் விரிவாகப் பதிவு செய்துவருகிறோம். அந்த வரிசையில் கடலூர் தொகுதியின் நிலவரத்தை அறிய களமிறங்கினோம்.

கடலூர், குறிஞ்சிபாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியதுதான் கடலூர் மக்களவைத் தொகுதி. முக்கிய வேட்பாளர்களாக அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக டாக்டர் கோவிந்தசாமி, திமுக வேட்பாளராக முந்திரி வியாபாரி ரமேஷ், அமமுக வேட்பாளராக காசி.தங்கவேல் மூவரும் போட்டியிடுகிறார்கள்.

வேட்பாளர்கள் அறிமுகம்

பாமக வேட்பாளரான கோவிந்தசாமி வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர். பாமகவின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவரான இவர், நல்ல அரசியல் அனுபவம் உள்ளவர். தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர்.

அமமுக வேட்பாளரான காசி தங்கவேலும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அதிமுகவில் கவுன்சிலராகப் பதவி வகித்துள்ள இவர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சொரத்தூர் இராஜேந்திரனின் சித்தி மகன். அமமுக சார்பில் பொறியாளர் சரவணன் போட்டியிட இருந்த நிலையில் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மாற்று வேட்பாளரான தங்கவேலுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

திமுக வேட்பாளர் ரமேஷ் செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர். பிரபலமான முந்திரி வியாபாரியான இவருக்கு அரசியல் அனுபவம் எதுவும் இல்லை. தொகுதி மக்களுக்கு அறிமுகமில்லாதவர் மட்டுமல்லர், திமுகவினருக்கே அறிமுகமில்லாதவராக இருக்கிறார். இருப்பினும் பணத்தால் மட்டுமே வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் திமுகவினர்.

ரமேஷ் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் துணையோடு அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்துவருகிறார். அமமுக வேட்பாளர் காசி தங்கவேல் வன்னியர் சமூகமாக இருந்தாலும் பட்டியலின மக்கள் மத்தியிலும் தடையில்லாமல் வாக்கு சேகரித்துவருகிறார்.

ஆனால், பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியால் பட்டியலினப் பகுதிகளில் வாக்கு சேகரிக்கப் போக முடியவில்லை. நேற்று முன்தினம் கடலூர் முதுநகர் பீமாராவ் நகர் சுத்துக்குளம் பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற கோவிந்தசாமியை ஊருக்குள் வரவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர் அந்த ஊர் மக்கள். பண்ருட்டி அருகில் கண்டரக்கோட்டை பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். பெண்ணாடம் சோழன் நகர் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த கோவிந்தசாமியை, வாகனத்தில் இருக்கும் பாமக கொடியைக் கழட்டிய பிறகுதான் உள்ளே வருவதற்கு அனுமதித்துள்ளனர்.

இதனால் சமுதாய வாக்குகளையே உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறது பாமக. இருப்பினும் வேல்முருகனின் தவாகவினர் பாமகவுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வேல்முருகனின் சொந்த ஊர் கடலூர் தொகுதிக்குள் வருவதால், பாமகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர்.

தொகுதிக்குள் சமூக அடிப்படையில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களைக் கீழ்வரும் அட்டவணையில் சதவிகிதம் வாரியாகக் காண்போம்.

திமுக வேட்பாளரோ சிறுபான்மையினர் வாக்குகள், யாதவர், நாயுடு, முதலியார் மற்றும் பட்டியலின மக்களின் 45 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம் என்ற கணக்குப்போட்டு வருகிறார். அமமுக வேட்பாளர் தங்கவேலோ வன்னியர் மற்றும் தலித் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்பதில் குறியாக இருக்கிறார். பாமக வேட்பாளர் கோவிந்தசாமி, பட்டியலின மக்கள் வாக்குகளில் 10% சதவிகிதத்தைப் பெற்றுவிட்டால் வெற்றி நிச்சயம் என்ற கணக்குகளைப் போட்டுப் போராடிவருகிறார்.

ஆக மொத்தம், வன்னியர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள்தான் கடலூரின் எம்.பி யார் என்பதைத் தீர்மானிப்பதாக உள்ளது. கடலூர் புயலில் கரையைக் கடக்கப்போவது ரமேஷா அல்லது கோவிந்தசாமியா என்பது மே 23ஆம் தேதி தெரிந்துவிடும்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon