மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது: காங்கிரஸ்!

எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது: காங்கிரஸ்!

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா இம்முறை கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம் கர்நாடகாவுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, ”2019 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சிக்குக் கொண்டு வரும் எண்ணத்தில் மக்கள் மனநிலை உள்ளது. மதவாத, பிரிவினைவாத சக்திகளைப் புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். மோடி அலை என்பதும் தற்போது இல்லை. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறை ஆட்சிக்கு வராமல் தடுக்கும் என்பதைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

”இம்முறை 543 தொகுதிகளில் காங்கிரஸும், பாஜகவும் தனித்தனியே 150 தொகுதிகளைத் தாண்டும். ஆனால் இருகட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெறும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனிப்பட்ட முறையில், பெரும்பான்மை பலத்தைப் பெறும்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.

”மோடியைத் தாக்கி பேசினால் அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தாக்குவதாக அர்த்தம். ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் சின்னமாக மோடி உள்ளார். தேர்தல் பிரச்சாரங்களில் அவர், விவசாயிகள், பெண்கள், வேலையின்மை குறித்து பேசுவதில்லை, மாறாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து மட்டுமே பேசி வருகிறார்.

கடந்த காலங்களில் 12 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடைபெற்றுள்ளது. 1948-49ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் போரின் போது மோடி பிறந்திருக்கக் கூட மாட்டார். 1977ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது வங்க தேசம் தனியாகப் பிரிக்கப்பட்டது. அப்போது அவர் எங்கே போனார்? ராணுவத்தில் சிப்பாயாக இருந்தாரா?” என்று கேள்வி எழுப்பியதுடன் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொடர்ந்து அடிக்கடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடப்பதாகவும் குறிப்பிட்டார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon