மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

வாக்காளர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை!

வாக்காளர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை!

வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கொளுத்தும் வெயிலைக்கூடப் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்கத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது.

நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 15) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் எல்லைக்குள் வாக்காளர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும், இந்த தொகுதிகளுக்கு நாளை மாலை முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகை பணம் தொடர்பான விவரங்களைக் கூறிய அவர், இதுவரை பறக்கும் படையினர் மூலம் ரூ.132.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் ரூ.65 கோடி திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 286 கோடி ரூபாய் மதிப்புள்ள 998 கிலோ தங்கம் மற்றும் 642 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியவர் இதுவரை அரசியல் கட்சிகள் மீது 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். பாஜக மீது 15 வழக்குகளும், காங்கிரஸ் மீது 10 வழக்குகளும், அதிமுக மீது 68 வழக்குகளும், திமுக மீது 46 வழக்குகளும், அமமுக மீது 55 வழக்குகளும் பதிவாகியுள்ளதாகப் பட்டியலிட்டுள்ளார்.

சென்னை எம்.எல்.ஏ விடுதிகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை 924 வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு 8 மணி வரை அதாவது இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சத்ய பிரதா சாஹூ கூறியிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், இந்த தேர்தலில் அதிகளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon