மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

தபால் வாக்கை விற்ற காவலர்: வழக்கு பதிவு!

தபால் வாக்கை விற்ற காவலர்: வழக்கு பதிவு!

தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பெயரில், தபால் வாக்கை விற்ற போலீஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் போலீசார், அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோர் தபால் வாக்குப் பதிவு செய்யலாம். வரும் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக, அரசு ஊழியர்கள் பலர் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த அந்தோணி சேகர், உவரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது தபால் வாக்கினை, திமுகவைச் சேர்ந்த ஜெபராஜ் என்பவருக்கு 7,500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். தேர்தல் பறக்கும் படையினர் ஜெபராஜின் வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் இருந்த தபால் வாக்கைக் கைப்பற்றினர். அதன்பிறகே இந்த விஷயம் வெளியே தெரிய வந்தது.

தபால் வாக்கை விற்பனை செய்த குற்றத்துக்காக, அந்தோணி சேகர் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ் என்பவர் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon