மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

யோகி , மாயாவதிக்கு பிரச்சாரம் செய்ய தடை!

யோகி , மாயாவதிக்கு பிரச்சாரம் செய்ய தடை!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை ஏப்ரல் 16ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. யோகி ஆதித்யநாத்துக்கு 72 மணி நேரமும், மாயாவதிக்கு 48 மணி நேரமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற பிரச்சாரத்தால் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இருவரது சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக ஏப்ரல் 11ஆம் தேதியன்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், இஸ்லாமியர்களால் மிகவும் மதிக்கப்படும் அலிக்கும், இந்துக் கடவுளான ஹனுமனுக்கும் நடைபெறும் போட்டிதான் மக்களவைத் தேர்தல் என்று யோகி ஆதித்யநாத் பேசினார். ஹனுமன் மீது பாஜகவுக்கு நம்பிக்கையிருப்பதால் தேர்தலில் வெற்றிபெறுவோம் எனவும் யோகி ஆதித்யநாத் பேசினார். இதைக் காரணமாக காட்டி தேர்தல் ஆணையம் அவர் பரப்புரை நடத்த தடை விதித்துள்ளது.

மேலும், இந்திய ராணுவத்தை மோடியின் படை என்று தேர்தல் பரப்புரையில் யோகி ஆதித்யநாத் அழைத்தார். இதைத் தொடர்ந்து, கருத்துகளை தெரிவிக்கும்போது கவனமாக பேசவேண்டும் என்று யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இந்திய முஸ்லிம் லீக் கட்சி சுதந்திர போராட்ட இயக்கத்தில் நாட்டை பிளந்த வைரஸ் எனவும் யோகி ஆதித்யநாத் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். இந்த கருத்தும் சர்ச்சைக்குள்ளானது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள இஸ்லாமியர்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்குகளை சிதறடித்துவிடாமல், பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென தேர்தல் பரப்புரையில் மாயாவதி வலியுறுத்தினார். சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக மாயவதி, யோகி ஆதித்யநாத் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 15) கேள்வியெழுப்பியது. பின்னர் இருவருக்கும் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon