மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

பிபி ஆண்டர்ஸன்: வலசை சென்ற ஆன்மா!

பிபி ஆண்டர்ஸன்: வலசை சென்ற ஆன்மா!

உலக சினிமா ரசிகர்களின் ஆதர்சமான ஸ்வீடன் இயக்குநர் இங்மர் பெர்க்மனின் படங்களில் கதாநாயகியாக நடித்த பிபி ஆண்டர்சன் நேற்று (ஏப்ரல் 14) மறைந்தார். 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட இவர், அந்த அதிர்விலிருந்து பேச்சுத் திறனை இழந்தார். 83 வயதான பிபி ஆண்டர்சன், நேற்று ஸ்டாக்ஹால்ம் நகரத்தில் மறைந்தார்.

1935ஆம் ஆண்டு பிறந்த பிபி ஆண்டர்ஸன், ஸ்வீடனில் வருடம் தோறும் ஆயிரம் நாடகங்களுக்கு மேல் அரங்கேற்றப்படும் ராயல் டிராமாட்டிக் தியேட்டர் என்ற தேசிய நாடக பள்ளியில் நடிப்புக்கலை பயின்றார். அதன் பின், 1951ஆம் ஆண்டிலிருந்து மிஸ் ஜூலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த தி மிஸ்ட்ரஸ்(1963) பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுத்தந்தது.

பெர்க்மன் திரைப்படங்களில் நடித்த பின் உலகக் கவனத்தை ஈர்க்கத் துவங்கினார். ஸ்மைல்ஸ் ஆப் சம்மர் நைட் படத்திற்கு பின் பெர்க்மன் இயக்கிய சிறந்த படங்களுள் ஒன்றான தி செவன்த் சீலில் நடித்தார். அதன் பின்னர், பெர்க்மென்னுடனான கலைப்பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அவருடைய பதிமூன்று திரைப்படங்களில் நடித்தார்.

பெர்சோனா திரைப்படத்தில் லிவ் உல்மனுடன் இவர் நடித்த செவிலியர் கதாப்பாத்திரம் இவரது நடிப்புலகின் உச்சமென்றே கூறலாம். முகங்கள் மட்டுமே பேசும் அப்படத்தில் லிவ் உல்மன் போன்ற ஏற்கனவே அறியப்பட்ட சிறந்த நடிகைக்கு இணையான சவாலான பாத்திரத்தில் பிபி ஆண்டர்சன் தன் ஒட்டுமொத்த திறமையையும் நீருபித்திருப்பார்.

பிபி ஆண்டர்சன் பெர்க்மனுடன் சிறிது காலம் உறவிலும் இருந்தார். அது அவர்கள் இணைந்து பணியாற்றிய திரைப்படங்களிலும் வெளிப்பட்டது. இருத்தல் மீதான சந்தேகம், வாழ்வு, ஆன்மீகம் என எப்போதும் தன் படைப்புகளின் வழியாக விசாரணை செய்து கொண்டேயிருக்கும் பெர்க்மன்னின் நுட்ப உணர்வுகளை பிபி ஆண்டர்சனால் எளிதாக அவதானிக்க முடிந்துள்ளது.

பெர்க்மனுடன் 13 படங்கள் பணியாற்றிய ஆண்டர்சன் நடித்த முக்கியமான மற்ற படங்கள், வைல்ட் ஸ்ட்ராபெர்ரிஸ், தி மெஜிசியன், பிரின்க் ஆப் லைப், தி பேசன் ஆப் அனா மற்றும் தி டச்.

குறைந்த பொன்னிற கூந்தலும், பரந்த புன்னகையுமாய் ஒளிவீசும் கண்களுடன் கிளாஸிக் சினிமாவில் வலம் வந்த பிபி ஆண்டர்சன், குளிர் நிறைந்த திரைப்படச் சுருளுக்குள் எப்போதும் சுவாசித்துக் கொண்டிருப்பார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon