மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

கட்கரிக்கு புரியவைப்போம்: ஸ்டாலினுக்கு அன்புமணி

கட்கரிக்கு புரியவைப்போம்: ஸ்டாலினுக்கு அன்புமணி

எட்டுவழிச் சாலையினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி அது தேவையில்லை என்று நிதின் கட்கரிக்கு புரியவைப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று நடந்த அதிமுக கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘ நீதிமன்றம் தடை விதித்தாலும், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அந்தத் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றப்படும்” என்று பேசினார். எட்டுவழிச் சாலையை கடுமையாக எதிர்க்கும் பாமக நிறுவனர் ராமதாஸை மேடையில் வைத்துக்கொண்டே கட்கரி இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “முதல்வரையும், ராமதாஸையும் வைத்துக் கொண்டு எட்டு வழிச் சாலையை நிறைவேற்றுவேன் என நிதின் கட்கரி சொல்கிறார். வெட்கம், சூடு, சொரணை இருந்தால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டியதுதானே?” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக நீண்ட அறிக்கை ஒன்றை இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ். அதில், “மக்கள் நலனுக்கு எதிரான கட்கரியின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் பாமகவுக்கு உடன்பாடில்லை. இத்திட்டம் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை” என்று குறிப்பிட்டுள்ளார். 8 வழிச்சாலை தேவையில்லை என்பது தான் பாமகவில் நிலைப்பாடு. எனவேதான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாகவும் கூறியுள்ள அன்புமணி, அந்த வழக்கில் தான் 8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாகவும் ஒருபோதும் 8 வழிச்சாலை அமைக்கப்படாது எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருவதை கட்கரி உணர்ந்திருக்கவில்லை அவர் கூறிவிட்டார் என்பதாலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடாது. அதுமட்டுமின்றி, எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். மாநில அரசின் ஒத்துழைப்பும், ஆதரவும் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவது சாத்தியமல்ல” என்றும் அன்புமணியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 8 வழிச்சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி அது தேவையில்லை என்பதை நிதின் கட்கரிக்கு புரிய வைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

. கட்கரி பேச்சை மேடையிலேயே தடுத்து நிறுத்தாதது ஏன்? என்று கூறி வழக்கம் போலவே தடித்த வார்த்தைகளில் ராமதாஸை ஸ்டாலின் விமர்சித்துள்ளதாக கூறியுள்ள அன்புமணி, “ஒரு மேடையில் ஒரு கட்சியின் தலைவர் பேசும் போது அதில் குறுக்கிடாமல் இருப்பது தான் மேடை நாகரிகமாகும். இந்தியாவில் எங்கும் ஒரு கட்சித் தலைவரின் பேச்சை இன்னொரு கட்சித் தலைவர் தடுத்து நிறுத்துவது நடக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

8 வழிச்சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்தவும், அதனால் பாதிக்கப்படும் உழவர்கள் நலனை பாதுகாக்கவும் ஸ்டாலின் இதுவரை செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் எட்டுவழிச்சாலை திட்டத்தை வரவேற்றவர் தான் ஸ்டாலின் என்றும் விமர்சித்துள்ளார். ஸ்டாலினுக்கு இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon