கர்நாடக மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. மத்திய பெங்களூர் மக்களவைத் தொகுதியில் ராகுல் திராவிட் வாக்களிக்க வேண்டும். ஆனால் வாக்காளர் பட்டியலிலிருந்து ராகுல் திராவிட் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் தனது பெயரை இணைப்பதற்கு மார்ச் 16ஆம் தேதிக்குள் படிவம்-6ஐ சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர் படிவத்தை சமர்ப்பிக்க தவறிவிட்டதால் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராகுல் திராவிடும், அவரது மனைவியும் இந்திரா நகரிலிருந்த தங்களது பூர்வீக வீட்டிலிருந்து அஷ்வத் நகருக்கு வீடுமாறிவிட்டதால் அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும்படி திராவிடின் சகோதரர் விஜய் படிவம்-7ஐ சமர்ப்பித்திருந்தார். விஜய்யின் கோரிக்கையைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி ஒருவர் இந்திராநகரிலுள்ள திராவிடின் பழைய இல்லத்துக்கு சென்று சரிபார்த்த பிறகு திராவிடின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளார். இதனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
பெயர் நீக்கம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் பெயரை இணைக்க திராவிட் முயற்சிக்கவில்லை என கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சிவ் குமார் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்ட பிறகே ராகுல் திராவிடின் பெயர் தவறிவிட்டதை தேர்தல் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் கர்நாடகாவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றபோது தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக திராவிட் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.