மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 10 டிச 2019

நளினியின் பரோல் மனு: அரசுக்கு உத்தரவு!

நளினியின் பரோல் மனு: அரசுக்கு உத்தரவு!

மகள் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதம் பரோல் கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு ஜூன் 11 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஆரித்ராவின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை 2000 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பின், 10 ஆண்டு அதற்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளைத் தமிழக அரசு விடுதலை செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.

ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்கச் சிறை விதிகள் வகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் பரோல் கோரி வேலூர் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்ய நாரயணன், எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தாக்கல் செய்த மனு தொடர்பாகத் தமிழக அரசு வரும் ஜூன் 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் அவசரமாக பரோல் தேவை என்றால் உயர் நீதிமன்ற விடுமுறைக்கால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற நளினிக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon