தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு பாஜக தொடர்பான ஒளிபரப்புகள் அதிகளவில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்பான கவரேஜ்கள் டிடி நியூஸ் தொலைக்காட்சி மற்றும் அதன் பிராந்திய தொலைக்காட்சிகளில் சுமார் 160 மணி நேரங்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்பான கவரேஜ்கள் இதில் பாதியளவுதான் இடம்பெற்றுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு டிடி நியூஸ் ஒதுக்கியுள்ள நேரம் குறித்து ஏப்ரல் 5ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு அத்தொலைக்காட்சி அளித்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி தொடர்பான கவரேஜ்கள் டிடி நியூஸில் 80 மணி நேரம் இடம்பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பான கவரேஜ்கள் 8 மணி நேரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஒரு கட்சிக்கு சார்பாக தொலைக்காட்சியின் கவரேஜ்கள் இடம்பெறுவதைத் தவிர்க்கும் வகையிலும், அவ்வாறு இருந்தால் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த அறிக்கையை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒளிபரப்புகள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஆனால் பாரதிய ஜனதா கட்சி மக்களவையில் பெரும்பான்மை இடங்களிலும், 16 மாநிலங்களில் ஆட்சியிலும் உள்ளது. காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களில்தான் ஆட்சியில் உள்ளது. அதனால் ஒளிபரப்பில் இந்த வித்தியாசம் காணப்படலாம் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.