மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

மோடி திருடர்: ராகுலுக்கு நோட்டீஸ்!

மோடி திருடர்: ராகுலுக்கு நோட்டீஸ்!

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடர் என்று கூறியதற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வரும் ராகுல் பிரதமரைத் திருடர் என்று கூறி வருகிறார். நேற்று முன்தினம் (ஏப்ரல் 13) கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய ராகுல், ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் 100 சதவிகிதம் திருடர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மோடி ரூ.30 ஆயிரம் கோடியை அவரது நண்பரான அம்பானிக்குக் கொடுத்துள்ளார். நீங்கள் (மோடி) 100 சதவிகிதம் மக்களின் பணத்தைத் திருடிவிட்டீர்கள் என்பது உண்மையே என்று குறிப்பிட்டிருந்தார். இதுமட்டுமின்றி ஏன் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று முடிகிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கிடையே ரஃபேல் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.

இதற்கு கருத்து தெரிவித்த ராகுல், புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்துவதாக நீதிமன்றம் தெரிவித்ததன் மூலம், மோடியைத் திருடன் என உச்ச நீதிமன்றம் கருதுகிறது என்று பொருள்படும் படியும் விமர்சித்திருந்தார்.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டிய நிலையில், ராகுலின் கருத்துக்கு எதிராக பாஜக எம்பி மீனாட்சி லெகி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (ஏப்ரல் 15) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது கருத்துச் சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதி ரஃபேல் விவகாரம் குறித்துப் பேசியதற்கு ராகுல் காந்தி ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon