தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பீக்கிலிப்பட்டி எனும் ஊரில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட ஏழரை லட்சம் ரூபாயைக் கைப்பற்றியுள்ளனர் தேர்தல் பறக்கும்படையினர்.
வரும் 18ஆம் தேதியன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக கனிமொழியும், பாஜக சார்பாக தமிழிசை சவுந்தரராஜனும், அமமுக சார்பாக புவனேஸ்வரனும், நாம் தமிழர் கட்சி சார்பாக கிறிஸ்டன்டைன் ராஜா சேகரும், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன்குமரனும் போட்டியிடுகின்றனர்.
இதே மக்களவை தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் பி.சின்னப்பன், திமுக சார்பில் ஏ.சி.ஜெயக்குமார், அமமுக சார்பில் கோ.ஜோதிமணி, சுயேச்சை வேட்பாளராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் உள்ளிட்ட 14 பேர் களத்தில் உள்ளனர். இன்னும் மூன்று நாட்களில் தேர்தல் வரவுள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடா தொடர்பாக கடும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 14) விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பீக்கிலிப்பட்டியில் ஒருவரது நிலத்தில் பணம் புதைக்கப்பட்டுள்ளதாகப் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பீக்கிலிப்பட்டி கலைமணி என்பவரது தோட்டத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஏழரை லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல எட்டயபுரம் கருப்பூர் பகுதியில் அந்தோணிசாமி என்பவருக்குச் சொந்தமான குடிசையிலும் சோதனையிட்டனர் தேர்தல் பறக்கும் படையினர். அப்போது, குடிசையினுள் இருந்த ஒரு அட்டைப்பெட்டியில் 68 லட்சத்து 50 ஆயிரத்து 100 ரூபாய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 49 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்தோணிசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
திருச்செந்தூர் காயாமொழி சாலையில் வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர் தேர்தல் பறக்கும்படையினர். அதில் ரூ.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். காரில் இருந்த வசீகரன், அஜித் ஆகியோரிடம் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த பணம் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.