மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

பணமுள்ளவர்களுக்கே பதவி!

பணமுள்ளவர்களுக்கே பதவி!

தமிழகத்தின் பிரதான கட்சிகளில் இருந்து எத்தனை கோடீஸ்வர எம்பிக்கள் மக்களவைக்கு சென்றார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

இந்த நூற்றாண்டில் நடந்துள்ள மூன்று பொதுத்தேர்தல்களிலும் தமிழ்நாட்டிலிருந்து மக்களவைக்கு அனுப்பப்படும் கோடீஸ்வர எம்பிக்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்ததை ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளிவந்த கட்டுரையில் பார்த்தோம். இது தேசிய அளவில் நாம் பார்க்கும் போக்கோடு ஒத்துப்போகிறது. 2004 இல் 36 விழுக்காடாக இருந்த இவர்களின் பங்கு, 2014இல் 79 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பிரதான கட்சிகளிலிருந்து எத்தனை கோடீஸ்வரர்கள் நம்முடைய பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர் என்பதைப் பார்ப்போம். 2009 இல் திமுகவைச் சேர்ந்த 18 எம்பிக்களில் 13 எம்பிக்கள் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்பிக்களில் 6 எம்பிக்கள் கோடீஸ்வரர்கள். அஇஅதிமுக மக்களவைக்கு அனுப்பிய 9 எம்பிக்களில் 5 எம்பிக்கள் கோடீஸ்வரர்களாக இருந்தனர். மொத்தத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களில் 70 விழுக்காட்டினரும், அஇஅதிமுக எம்பிக்களில் 56 விழுக்காட்டினரும் கோடீஸ்வரர்கள்.

2014இல் நடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் அஇஅதிமுக வேட்பாளர்களே வென்றனர். அந்த தேர்தலில் வெற்றிபெற்ற 37 அஇஅதிமுக வேட்பாளர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள். ஆக, 2009 இல் 56 விழுக்காடாக இருந்த அஇஅதிமுக கோடீஸ்வர எம்பிக்களின் பங்கு, 2014 இல் 78 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றிபெற்ற எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு என்னவாக இருந்தது என்பதை அட்டவணையில் பார்ப்போம்.

2009 தேர்தலில் 41 விழுக்காடு தொகுதிகளில், போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிகம் சொத்து வைத்திருப்பவர்தான் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 கோடிக்கும் அதிகம் சொத்து வைத்திருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்த வேட்பாளர்களில் 35 விழுக்காட்டினர் தேர்தலில் வெற்றிபெற்றனர். 50 லட்சம் முதல் 5 கோடி வரை சொத்து வைத்திருந்தவர்களில் 20 விழுக்காட்டினரும், 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை சொத்து வைத்திருந்தவர்களில் 4 விழுக்காட்டினரும் வெற்றி பெற்றனர்.

10 லட்சத்திற்கும் குறைவாக சொத்து வைத்திருந்தவர்களில் வெற்றி பெற்றவர்கள் பங்கு வெறும் 0.20 விழுக்காடு மட்டுமே. யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறலாம் என்பதெல்லாம் ஏட்டில்தான் உள்ளது. பணமுள்ளவர்களுக்கே பதவி என்பதே நிதர்சனம்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon