மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

சென்னை: முன்னாள் எம்பி மனைவி கொலை!

சென்னை: முன்னாள் எம்பி மனைவி கொலை!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் வீட்டினுள் கொலையாகிக் கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரத்தினம். இவர், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி குழந்தைவேலுவின் மனைவி ஆவார். குழந்தைவேலுவின் மறைவுக்குப் பிறகு, ரத்தினம் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் பிரவீன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். மகள் சுதா திருப்பூரில் தனது குடும்பத்தினருடன் வசிக்கிறார்.

ஒரு மாதத்துக்கு முன்னர் பெசன்ட் நகர் வந்த பிரவீன், தனது தாய் ரத்தினத்திடம் சொத்து கேட்டு பிரச்சினை செய்ததாகக் கூறப்படுகிறது. நேற்று (ஏப்ரல் 14) இரவு தனது மகள் சுதாவுக்கு போன் செய்து பேசியுள்ளார் ரத்தினம். அப்போது, பிரவீன் சொத்து கேட்டு தன்னை மிரட்டுவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு உறவினரிடம் தகவல் தெரிவித்துள்ளார் சுதா.

அந்த உறவினர் ரத்தினத்தின் வீட்டுக்குச் சென்றபோது, அதன் வெளிப்பக்கம் பூட்டப்பட்டதைக் கண்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்தவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகர் போலீசார் வீட்டினுள் சென்றபோது, ரத்தினம் கொலையானது தெரிய வந்தது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவரது மார்பில் கத்தியால் குத்தப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார். இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பிரவீனைத் தேடி வருகின்றனர்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon