மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

தெய்வ மகளின் அடுத்த பாய்ச்சல்!

தெய்வ மகளின் அடுத்த பாய்ச்சல்!

நடிகை வாணி போஜன் தற்போது தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

தெய்வமகள் தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் வாணி போஜன். சின்னத் திரையிலிருந்து நடிகர், நடிகைகள் வெள்ளித் திரையை நோக்கி படையெடுத்துவரும் நிலையில் வாணி போஜனுக்கும் தமிழ்த் திரையுலகில் இருந்து வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

லோகேஷ் இயக்கும் ‘என் 4’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். காசிமேடு பகுதியை மையமாகக் கொண்டு சுயாதீனத் திரைப்படமாக உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுவந்த போதே வைபவ் நடிக்கும் புதிய படத்தில் வாணி போஜன் இணைந்தார். இந்தப் படத்தை எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார்.

இந்த இரு படங்களும் வெளிவருவதற்கு முன்பாக வாணி தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வரும் விஜயதேவரகொண்டா தற்போது தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

அவர் தயாரிக்கும் முதல் படத்தில் வாணி கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குநர் தருண் பாஸ்கர் நடிக்கிறார். இவர் விஜய்தேவரகொண்டா நடித்த பெல்லு சூப்புலு படத்தை இயக்கியவர்.

படம் குறித்து வாணி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “விஜய்யின் முதல் புரொடக்‌ஷனில் நடிப்பது மகிழ்ச்சி. சென்னையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சமீர் இந்தப் படத்தை இயக்குகிறார். பல்வேறு ஜானர்களை உள்ளடக்கிய சுவாரஸ்யமான கதை. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. படக்குழுவில் பலர் தமிழர்கள் என்பதால் மொழிப் பிரச்சினை இல்லை. வசனம் பேசுவதில் எனக்கு பலர் உதவி புரிகின்றனர். படப்பிடிப்புக்கு முன்பாக ஒத்திகை பார்த்துவிட்டோம். முதலில் பயம் இருந்தாலும் பின்னர் நம்பிக்கை வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon