மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

கோடீஸ்வரர்களுக்கே எம்.பி. சீட்!

கோடீஸ்வரர்களுக்கே எம்.பி. சீட்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்கள் அனைவருமே கோடீஸ்வரர்கள் என்று தேர்தல் சீர்திருத்தத்திற்கான இயக்கம் (எம்.இ.ஆர்) தனது ஆய்வில் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் வேட்பாளர்கள் அளித்துள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில் கோடீஸ்வரர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த விவரங்களை எம்.இ.ஆர். சேகரித்து வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலின்படி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய தமிழகத்தின் முக்கியமான ஐந்து அணிகளைச் சேர்ந்த 194 வேட்பாளர்களில் 54 பேர் மட்டுமே கோடீஸ்வரர்கள் அல்லர் என்பது தெரியவந்துள்ளது.

இதில் அதிமுக, திமுக, பாஜகவைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள். ஐந்து அணிகளிலும் மூன்றில் இரு வேட்பாளர்கள் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர். எனவே, வேட்பாளருக்கு சீட் ஒதுக்குவதில் பணம் தவிர்க்க முடியாத வலிமை படைத்த சக்தியாக உள்ளது என்பதை இந்த ஆய்வு வெளிக்காட்டுகிறது.

திமுக கூட்டணியில் யார் ஒரு கோடிக்கும் குறைவான சொத்து வைத்துள்ளார்கள்?

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் இருவரும், மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகிய ஆறு பேர் ஒரு கோடிக்கும் குறைவான சொத்து விவரங்களை வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளனர். எஞ்சிய 33 வேட்பாளர்களும் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாகத் தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் ஒரே ஒருவர் மட்டுமே கோடீஸ்வரர் அல்ல

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரை எதிர்த்துப் போட்டியிடுகிற வடிவேல் ராவணன் மட்டுமே ஒரு கோடிக்கும் குறைவான சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். எஞ்சியவர்கள் அனைவருமே கோடீஸ்வரர்கள். முதல் 30 கோடீஸ்வரர்களில் 10 பேர் அதிமுக தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.

அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 15 வேட்பாளர்களும் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த ஒரு சிலர் தங்களுக்கு வெறும் 15,000 அல்லது 20,000 ரூபாய் வரைதான் சொத்து உள்ளது என தாக்கல் செய்துள்ளனர்.

டாப் 30 கோடீஸ்வர வேட்பாளர்களில் முதல் 10 பேர்

1. வசந்த குமார் (காங்கிரஸ்) கன்னியாகுமரி தொகுதி – ரூ. 417.48 கோடி

2. இசக்கி சுப்பையா (அமமுக) தென்சென்னை தொகுதி - ரூ.237.56 கோடி

3. சி.மகேந்திரன் (அதிமுக) பொள்ளாச்சி தொகுதி – ரூ.172.32 கோடி

4. ஆர்.மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) – கோவை தொகுதி – ரூ.131.48 கோடி

5. ஏ.சி.சண்முகம் (அதிமுக கூட்டணி) – வேலூர் தொகுதி - ரூ.125.83 கோடி

6. ஜெகத்ரட்சகன் (திமுக) அரக்கோணம் தொகுதி - ரூ.114.69 கோடி

7. பாரிவேந்தர் ( ஐஜேகே) – பெரம்பலூர் தொகுதி - ரூ. 97.26 கோடி

8. சாருபாலா தொண்டைமான் (அமமுக) – திருச்சி தொகுதி - ரூ. 92.37 கோடி

9. கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) சிவகங்கை தொகுதி - ரூ.79.34 கோடி

10. எல்.கே.சுதீஷ் (தேமுதிக) கள்ளக்குறிச்சி தொகுதி - ரூ.68.57 கோடி

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon