மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: வேப்பம்பூ ரசம்

கிச்சன் கீர்த்தனா: வேப்பம்பூ ரசம்

சித்திரை ஸ்பெஷல்: நன்மை தரும் கசப்பு!

கோடை வெயில் கொளுத்தி எடுத்தாலும் வேப்பம்பூக்களின் உதிர்வுகள் ரம்மியமானவை. வேம்பின் ஒவ்வொரு பாகமும் பயனுள்ளவை. ஆனாலும் இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவு. காரணம் கசப்பு. அறுசுவைகளில் அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மை பயக்கும் சுவையே கசப்பு. மற்ற சுவைகளை அறிய இந்தச் சுவையே பெரிதும் உதவுகிறது.

என்ன தேவை?

வேப்பம்பூ - ஒரு டேபிள் ஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

வெல்லம் - அரை டீஸ்பூன்

மஞ்சள்பொடி - 2 சிட்டிகை

தாளிக்க:

நெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4 - 5

உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்

துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - சிறிது

எப்படிச் செய்வது?

வேப்பம்பூவை லேசான தீயில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, வெல்லம், மஞ்சள்பொடி சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன், ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய்விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். இறுதியாகச் சிறிது நெய் விட்டு வேப்பம்பூவை வதக்கி ரசத்தில் சேர்க்கவும். வேப்பம்பூ சேர்த்தவுடன் ரசத்தைக் கொதிக்கவிடக் கூடாது.

என்ன பலன்?

வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடல் பலம் பெறும். கசக்கும் வேப்பம்பூவை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். வயிற்றுவலி சரியாகும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மயக்கம், வாந்தி மற்றும் பித்தம் தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். உடல் வலுப்பெறும். சர்க்கரை நோயாளிகள், வயிறு, தோல் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள், தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

நேற்றைய ரெசிப்பி: முக்கனிப் பாயசம்!

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon