மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

சூழலை மாசுபடுத்திய காரணிகள் எவை? - அ.குமரேசன்

சூழலை மாசுபடுத்திய காரணிகள் எவை? - அ.குமரேசன்

தேர்தல் நேரம் – மதவாதக் களம் – மக்கள் மனம்: 5

ஓர் இடம் திடீரென எரிந்து சாம்பலாகிறது என்றால் அங்கே இரண்டு கூறுகள் நிச்சயம் இருக்கும். ஒன்று, யாரோ தீப்பந்தம் கொண்டுவந்து பற்றவைத்த வெளிக்கூறு. அழுத்தத்தால் ஸ்டவ் வெடிப்பது, மின் கசிவு ஏற்படுவது போன்றவையும் வெளிக்கூறுதான். இரண்டு, காய்ந்த சருகுகள் குவிந்திருந்த உட்கூறு. கொட்டிய எண்ணெய் சிதறிக் கிடப்பது, வெளியேறிய சமையல் வாயு பரவியிருப்பது போன்றவையும் உட்கூறுதான். இந்திய மக்கள் மனங்களில் வகுப்புவாத நெருப்பு பற்றிப் பரவுவதற்கு ஏதுவாக இருந்த உட்கூறுகள் சிலவற்றை முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம். இப்போது அந்த நெருப்பைப் பற்றவைத்து விசிறிவிட்ட புறக்கூறுகளைப் பார்ப்போம்.

இந்தப் புறக்கூறுகளில் மூன்று நிலைகள் உள்ளன. தங்களுடைய மூச்செல்லாம் மதவாதம் கலந்திருக்கும் அமைப்புகளும் அவற்றைச் சார்ந்த ஆட்களும் முதல் நிலை. அவர்களின் மூச்சிலிருந்து காற்றில் பரவிய வகுப்புவாதக் கந்தகத்தைக் காணத் தவறிய, கண்டாலும் சரியான முறையில் எதிர்வினையாற்றித் தடுக்கத் தவறிய அமைப்புகளும் ஆட்களும் இரண்டாம் நிலை. மூன்றாவதாக, மதச்சார்பின்மை பற்றிய எதிர்மறைச் சிந்தனை மேலோங்கக் காரணமான சமரச நிலை.

அந்த மூன்றாம் நிலை ஆகப் பெரும்பாலும் அரசு இயந்திரம் சம்பந்தப்பட்டது. அரசுத் துறையான அகில இந்திய வானொலியின் நிலையங்களிலும் அதன் பண்பலைகளிலும் நாள்தோறும் காலை விடியலின் முதல் நிகழ்ச்சியாக அருளமுதம், இசையமுதம், தேனமுதம் என்பதான பெயர்களில் பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. பொதிகை உள்ளிட்ட பொதுத்துறைத் தொலைக்காட்சிகளிலும் இதே போல் ஒளிபரப்பப்படுகின்றன. அருளமுதம் என்ற பெயரிலாவது கடவுள் நம்பிக்கை சார்ந்த நிகழ்ச்சி என்ற பொருட்பொருத்தம் அமைகிறது. ஆனால், இசையமுதம், தேனமுதம் என்ற பெயர்கள் எப்படிப் பொருந்துமோ, அந்தப் பெயர்களைத் தேர்ந்தெடுத்த அதிகாரிகளுக்கே வெளிச்சம். இசையின் குளுமையும் தேனின் இனிமையும் பக்தியுலகத்தினருக்கு மட்டுமே சொந்தமானவையா?

பெயரில் தொடங்குகிற கோளாறு, நிகழ்ச்சிகளில் தொடர்கிறது. அந்த ஒரு மணி நேரத்தில் பெரும்பகுதி நேரம் சிவன், திருமால், முருகன், ராமன், மலைமகள், கலைமகள், திருமகள், ஐயப்பன் என்று இந்துக் கடவுள்களைப் போற்றுகிற பாடல்களாக ஒலி / ஒளிபரப்பப்படும். எஞ்சியுள்ள நேரத்தின் முதல் பாதியில் அல்லா, நபிகள், பாத்திமா என்று இஸ்லாமிய இறை வணக்கப் பாடல்களாக வரும். இரண்டாம் பகுதியில் கர்த்தர், இயேசு, மேரி என்று கிறிஸ்துவத் துதிப் பாடல்கள் காற்றில் கலக்கும். ரம்ஜான், மொகரம், பக்ரீத், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், பெரியவெள்ளி போன்ற நாட்களில் மட்டும் சிறுபான்மை மதங்கள் சார்ந்த பாடல்கள் முன்வரிசைக்கு வரும். புத்தம், சமணம் போன்ற சமயங்கள் விஷயத்திலும் இப்படித்தான். (பெரும்பான்மை மதம் சார்ந்த பாடல்களிலும் ஒருநாள்கூட நீங்கள் சுடலைமாடசாமிப் பாட்டையோ, எல்லையம்மன் பாட்டையோ, அய்யனார் பாட்டையோ, முத்துமாரி பாட்டையோ கேட்டுவிட முடியாது. கடவுள்களையே பேதப்படுத்தி வைத்திருக்கிறது அற்ப மானிடர்களின் அதிகார வலிமை.)

அரசும் அதன் நிறுவனங்களும் எந்த மதத்தையும் சார்ந்திருக்கக் கூடாது, எந்த மதத்தையும் முன்னிலைப்படுத்தக் கூடாது, எந்த மதத்தின் கருவியாகவும் செயல்படக் கூடாது என்பதே மதச்சார்பின்மை என்பதன் உண்மையான பொருள். நாட்டு மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம், வணங்கப்படும் வாய்ப்பை எந்தக் கடவுளுக்கும் வழங்கலாம். தடையில்லை. வழிபாட்டு நம்பிக்கையும் மதத்தைப் பின்பற்றுவதும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளாக உறுதிப்படுத்துகிறது இந்திய அரசமைப்பு சாசனம். ஆனால் அரசும் அதன் அமைப்புகளும் மதம் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அது பெரும்பான்மை மதமாக இருந்தாலும் சரி, சிறுபான்மை மதங்களானாலும் சரி. இந்த உன்னதமான கோட்பாடு ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தினராலும் கோரமான முறையில் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம்தான் மேற்படி அருளமுதங்கள்.

எதன் பெயரால் உறுதிமொழி எடுப்பது?

குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கடவுளின் பெயரால் உறுதிமொழியளித்துப் பதவியேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக எந்தக் கடவுளையும் குறிப்பிடுவதில்லை என்றாலும், அவரவர் தங்கள் கடவுளை நினைத்துக்கொள்ளலாம் என்றாலும் எதற்காகக் கடவுளை இங்கே இழுக்க வேண்டும்? கடவுளின் பெயரால் உறுதியேற்றவர்கள் எந்த அளவுக்குக் கடவுளுக்குப் பயந்து செயல்படுகிறார்கள் என்பதைத்தான் நாடு நிறைந்த ஊழல் கதைகள் காட்டிக்கொண்டிருக்கின்றனவே! சிலர் மனசாட்சியின் பெயரால் பதவியேற்கிறார்கள். அதற்கும் உத்தரவாதமில்லை. சட்டப்படி தட்டிக்கேட்க வழி செய்வது அரசமைப்பு சாசனம்தான். அதன் மீது மட்டுமே உறுதியளித்துப் பதவியேற்பதை நிலையான நடைமுறையாக்கலாமே?

அரசு அலுவலகங்களில் சட்டப்படி தடை இருக்கிறது என்றாலும், தடுக்க முடியாதபடி (அல்லது தடுக்க முயலாதபடி) ஆயுத பூஜை, பிள்ளையார் பூஜை எனக் கொண்டாடப்படுகிறது. அப்புறம், நீங்களும் வைத்துக்கொள்ளுங்கள் என்று பிற மதப் பண்டிகைகளும் அந்த மதங்களைச் சேர்ந்த ஊழியர்களால் கொண்டாடப்படுகின்றன. பொரியும் கொழுக்கட்டையும் நோன்புக் கஞ்சியும் ஆசீர்வதிக்கப்பட்ட கேக்கும் எல்லோருக்கும் விநியோகமாவதென்னவோ உண்மைதான். ஆனால் அரசு அலுவலகத்தில் இதையெல்லாம் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடல்லவா விநியோகமாக வேண்டும்?

தொடரும் சமரசங்கள்

எம்மதமும் சம்மதம் என்பது தனிமனித மன ஆளுமைக்குத்தானேயன்றி, அரசாங்க நிர்வாகத்துக்கு அல்ல. இதிலே ஏற்பட்ட தடுமாற்றம், பின்னர் அரசியல் செல்வாக்குத் தேடும் நோக்கத்தோடும், இருக்கிற செல்வாக்கை இழந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடும் பல்வேறு வகைகளில் விட்டுக்கொடுக்கிற சமரசங்களில் தொடர்ந்தது. சுயம்பு ராமர் கலவரத்தைத் தொடர்ந்து தாத்தா நேரு காலத்தில் மூடப்பட்ட பாபர் மசூதியின் ஒரு பகுதி பின்னர் பேரன் ராஜீவ் காலத்தில் திறக்கப்பட்டது, அவ்வாறு இந்துக்களைக் குளுமைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம். அதற்கு முன்பு இஸ்லாமிய அமைப்புகளின் நிர்பந்தத்தால் ஷரியத் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று வகுப்புவாத சமரசங்களை விரித்துக்கொண்டே போகலாம்.

இது “போலி மதச்சார்பின்மை” என்று இடதுசாரிகளும் இதர பல முற்போக்கு சக்திகளும் சுட்டிக்காட்டினர் – உண்மையான மதச்சார்பின்மைக் கோட்பாட்டை நிலைநிறுத்தும் நோக்கத்தோடு. ஆனால், அதே சொல்லாடலை ஆர்எஸ்எஸ் - பாஜக தலைவர்களும் கையாண்டனர் – மக்களிடையே பகைமையை வளர்க்கும் திட்டத்தோடு. உயர்மட்டத் தலைவர்கள் இப்படி இத்தகைய நாசூக்கான சொல்லாடல்களைக் கையாண்டனர் என்றால், இடைநிலைத் தலைவர்களும் உள்ளூர்த் தலைவர்களும் மலிவான சொல்லாடல்களால் வீசும் காற்றில் விஷம் தூவினர். ஒரு முஸ்லிம் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம், அவர்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு இல்லை, இப்படியே விட்டுவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மை மதத்தினராக இருப்பார்கள், இந்துக்கள் சிறுபான்மையாகிவிடுவார்கள்… சொல்லாடல்கள். சிறுபான்மை மதம் சார்ந்த யாரோ சிலர், எங்கேயோ எப்போதோ அத்துமீறல்களில் இறங்குகிறபோது, அது ஒட்டுமொத்தமாக அந்த மதத்தினர் மீதான வெறுப்பை வளர்க்கும் வகையில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்லி வெறியூட்டுவதேகூட பாசிச உத்திதான்.

இத்தோடு, மக்களைக் கைவிட்ட பொருளாதாரக் கொள்கைகள் முக்கியமான பங்கு வகித்தன. அடிப்படையான கல்வியிலும் மருத்துவத்திலும்கூட ஏற்றத்தாழ்வுகள் தங்களை ஏளனம் செய்வதாக எளிய மக்கள் கருதினார்கள். பணமிருந்தால்தான் மதிப்பு என்பது போய், பணமிருந்தால்தான் வாழ்க்கை என்கிற அளவுக்கு எங்கும் அவல நிலையின் ஆதிக்கம். சாதிய சக்திகளோடும் மதவாத அமைப்புகளோடும் செய்துகொள்ளப்பட்ட சமரசம். இவையெல்லாமாகச் சேர்ந்து, போலியாக மத நல்லிணக்கம் பேசுவோரைவிட நேரடியாக மதவாதம் பேசுகிறவர்களே மேல் என்ற எண்ணத்தைச் சிறுகச் சிறுக வளர்த்து வந்தது. அது மதவெறியை ஏற்கிற அல்லது அதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாதிருக்கிற மனநிலைக்கு ஊட்டமளித்தது.

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் படுகொலைகள், உத்தரப் பிரதேச வன்முறைகள், பாதிரியார் தன் குழந்தைகளோடு எரிப்பு, தமிழகத்தில் மண்டைக்காடு, கோவை என்று முழுக்கட்டுரைத் தொடரையே ஒதுக்கி வரிசைப்படுத்தினால்கூட அந்த வெறியின் விளையாட்டுகளைச் சொல்லி முடிக்க முடியாது. சுதந்திர இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் தோல்வியடைந்தவர்கள் அந்தக் கணத்திலிருந்தே தொடங்கிவிட்ட, ஓய்ந்துவிடாமல் தொடர்ச்சியாக வளர்த்துவந்த பகைமை அரசியல்தான் மத்திய ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு அறுவடை செய்துகொடுத்தது.

இந்த நிலைமைகளின் இணைகோடுகளாக, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் தொடங்கப்பட்ட அமைப்புகளின் நியாயமான பணிகள் ஒருபுறமிருக்க சில அமைப்புகளைச் சேர்ந்தோர் பொதுவெளிகளில்கூடப் பெரும்பான்மை மத நம்பிக்கைகளைத் தாழ்த்திப் பேசியது, ஜனநாயக இயக்கங்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது, அவர்களும் எல்லா வகையான மதவாத சக்திகளோடும் ஏதோவொரு கட்டத்தில் அனுசரித்துப்போனது போன்றவையும் இந்தச் சூழலுக்கு தூபம் போட்டு வளர்த்தன.

அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளில் வேறு எவரையும் விட உறுதியான நிலைப்பாடுகளை மேற்கொண்ட இடதுசாரி சக்திகள் இந்தப் பிரச்சினையிலும் அதே உறுதியோடும் நேர்மையோடும்தான் இருந்தார்கள் என்றாலும் ஒப்பீட்டளவில் அதில் போதாமை இருந்தது. பல்வேறு முற்போக்கான மக்கள் அமைப்புகள் மதவெறிக்கும் வகுப்புவாத அரசியலுக்கும் எதிராக உண்மையான உணர்வோடு போராடுகிறார்கள் என்றாலும், மக்களிடையே பகுத்தறிவுக் கருத்துகளைத் தொடர்ச்சியாகக் கொண்டுசெல்வதில் தயக்கம் காட்டினார்கள். அறிவியல் கண்ணோட்டத்தைப் பதியமிடுவதற்கு மாறாக நம்பிக்கைகளை நக்கலடிப்பதில் காலத்தை வீணாக்கியதால் ஏற்பட்ட பின்னடைவு… இப்படியான நிகழ்வுப் போக்குகளும் சேர்ந்துகொண்டன.

மத விமர்சனத்தின் வீச்சும் எல்லையும்

இதைப் பற்றிய விவாதங்களின்போது சிலர், சிறுபான்மை மதங்களையும் சரிசமமாக விமர்சிக்க வேண்டும் என்கிறார்கள். பெண்ணுரிமை உள்ளிட்ட மனித உரிமைகள் மறுப்பு, மூட நம்பிக்கைகள் போன்ற பிரச்சினைகள் வருகிறபோது வேறுபாடின்றி விமர்சிக்க வேண்டும்தான். ஆனால், பாசிசம் என்பது எல்லா மதங்களும் சமமாகப் பங்கேற்கிற அரசியல் அல்ல. அது ஒரு பெரிய மதம். மற்ற மதங்களை அழிக்கத் துடிக்கிற, மக்களை அடிமைப்படுத்துகிற, ஜனநாயகத்தை ஒழிக்கத் திட்டமிடுகிற, கருத்துரிமையைக் கருக வைக்க முயல்கிற ஒற்றை ஆதிக்க அரசியல்.

இன்றில்லாவிட்டாலும் உடனடி எதிர்காலத்தில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதாக இல்லாமல், அனைவரும் கூட்டாக நின்று வீழ்த்த வேண்டிய பாசிச அரசியல் பற்றிய அக்கறையோடு அணுகுவதாக, இவற்றைப் பற்றிய மனந்திறந்த உரையாடலில் ஈடுபட வேண்டும். தேர்தலின் மூலம் ஆட்சி பீடத்திலிருந்து மட்டுமல்ல, சமூக மனநிலையிலிருந்தே பாசிசத்தின் செல்வாக்கைத் துடைத்தெறிவதாக அந்த உரையாடல்கள் மக்களைச் சென்றடையுமானால் இந்தப் பகிர்வின் நோக்கம் நிறைவேறும்.

ஞாயிறு, 14 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon