மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ஐபிஎல்: அசைக்க முடியாத இடத்தில் சென்னை அணி!

ஐபிஎல்: அசைக்க முடியாத இடத்தில் சென்னை அணி!

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளில் சென்னையைத் தவிர மற்ற அணிகள் வெற்றியையும், தோல்வியையும் மாறி மாறிப் பெற்றுவரும் நிலையில் சென்னை அணி தொடர்ந்து வெற்றிகளையே குவித்துவருகிறது. நேற்று (ஏப்ரல் 14) கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் முடிவு இவ்வாறே அமைந்தது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

162 ரன்களை இலக்காகக் கொண்டு சென்னை அணி களமிறங்கிய நிலையில் தொடக்க வீரர் வாட்சன் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். டு பிளசி 24 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 5 ரன்களிலும், கேதார் ஜாதவ் 20 ரன்களிலும், தோனி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி அரை சதமடித்தார். ஜடேஜா அவருடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் இறுதி நேரத்தில் அதிரடியில் இறங்க சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 58 ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்குக் காரணமாக இருந்த இம்ரான் தாஹிர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று இரவு நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் சேர்த்தது.

156 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களான வார்னரும், பர்ஸ்டோவும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். 41 ரன்களில் பர்ஸ்டோ தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். வார்னரும் 51 ரன்களில் ஆட்டமிழக்க பின்னால் வந்த எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. ஒற்றை இலக்கத்திலும் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 116 ரன்களைச் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது.

இதனால் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி அணி வீரர் ரபாடா 4 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோரிஸ், கீமோ பவுல் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon