மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

திமுக - அதிமுக கூட்டணி: தாக்கும் தினகரன்

திமுக - அதிமுக கூட்டணி: தாக்கும் தினகரன்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் ஞானசேகரை ஆதரித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (ஏப்ரல் 14) திருவண்ணாமலையில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தினகரன், “சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆனால், எட்டு வழிச் சாலை திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் பேசுகிறார். பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் அப்படி பேசும் அளவுக்கு முதலமைச்சர் வாய்மூடி அமர்ந்திருக்கிறார்.

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்திலும், திருவண்ணாமலையிலும், தர்மபுரியிலும் இத்திட்டத்தால் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். கஞ்சமலையில் உள்ள இரும்புத் தாதுக்களை வெட்டி எடுக்க வேண்டுமென்பதற்காகவும், தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காகவும் உருவாக்கப்பட்ட திட்டம்தான் எட்டு வழிச் சாலை. இயற்கையையும், விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், பசுமையையும் அழித்து பசுமை வழிச்சாலை போடுகிறோம் என்று சொல்கிறார்கள்.

எட்டு வழிச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டபோது, இந்தச் சாலை வருவதால் தொழில் வளம் பெருகும் என்று சட்டமன்றத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் இத்திட்டத்தை வரவேற்கிறார்கள். ஏனென்றால் இவர்களிடையே மறைமுகமான கூட்டணி இருக்கிறது.

சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுக்கு ரூ.1,000 தருகிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.6,000 கொடுத்தும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்களான நாம்தான் அங்கே வெற்றி பெற்றோம். ஜிஎஸ்டியால் வணிகர்களும், சிறு குறு தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூடப்பட்ட தொழிற்சாலைகளால் சுமார் 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கவும், வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தரவும், நெசவாளர்கள், மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon