மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

ஐபிஎல்: ரஸ்ஸலுக்கு தடை போட்ட தாஹிர்

ஐபிஎல்: ரஸ்ஸலுக்கு தடை போட்ட தாஹிர்

ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதும் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தாலும் கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தின் மூலம் ரன் வேட்டையை நடத்தினார். அவரோடு இணைந்த நிதிஷ் ரானா 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க ராபின் உத்தப்பா எதிர்கொண்ட முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 51 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்த கிறிஸ் லின் தாஹிர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் அதிரடி ஆட்டத்துக்கு பெயர்போன ஆண்ட்ரூ ரஸ்ஸல் களமிறங்கினார். வந்த வேகத்தில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் பறக்கவிட்ட அவர் ரன் ரேட்டை மேலும் அதிகரிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 10 ரன்களில் தாஹிர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் அவர் சராசரியாக 40 ரன்களுக்கும் அதிகமாக அடித்துவந்தார். இந்நிலையில் விரைவாக அவரது விக்கெட் வீழ்த்தப்பட்டது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

கேப்டன் தினேஷ் கார்த்திக்காலும் நீண்ட நேரம் நிற்கமுடியவில்லை. 18 ரன்களில் அவர் வெளியேறினார். சுப்மன் கில் 15 ரன்களிலும், குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 27 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

162 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கி ஆடிவருகிறது. 9 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

ஞாயிறு, 14 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon