மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

100 கோடி: மறுத்த அஜித், விஜய்

100 கோடி: மறுத்த அஜித், விஜய்

தமிழ் சினிமா 365: பகுதி - 51

இராமானுஜம்

தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் சினிமா ஆர்வலர்களால் சொந்த பணத்தில் படங்கள் தயாரிக்கப்பட்டன. தொழில் வளர்ச்சியடைந்த போது சினிமா தயாரிப்புக்கு பண உதவி செய்யும் பைனான்சியர்கள் என்றொரு வட்டம் உருவானது. இது தயாரிப்பாளர்களுக்கும் பைனான்சியர்களுக்கும் இடையிலான தொடர்பாக இருந்தவரை விட்டுக் கொடுத்தல், அனுசரித்து கடனை திரும்ப பெற்றுக் கொள்வது என்ற நல்லுறவு இருந்தவரை தொழிலில் நாணயம் நம்பிக்கை இருந்தது. லாபமில்லை என்றாலும் பெரும் இழப்பு தயாரிப்பாளர்களுக்கு இல்லாத போக்கு இருந்தது.

மார்வாடிகள் சினிமா பைனான்ஸில் பின்தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்வோரும், கந்து வட்டி தொழில் செய்பவர்களும் சினிமா தயாரிப்புக்கு பைனான்ஸ் செய்ய தொடங்கிய போது தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, அப்படங்களில் நடிக்கும் நடிகர்களும் கடனுக்கு பொறுப்பாளர்களாக ஆக்கப்பட்டார்கள்.

இதில் முன்னணி நட்சத்திரங்களும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு பட ரிலீஸ் நேரத்தில் நடிகர்கள் அப்படத்திற்கு வாங்கிய சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க அல்லது திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனால் ரஜினிகாந்த், அஜீத் குமார், விஜய் ஆகியோர் சமீப வருடங்களாக மொத்தமாக சம்பளத்தை கொடுக்கக்கூடிய, பைனான்சியர் பிரச்சினையை தங்களிடம் கொண்டு வராத தயாரிப்பாளர்களின் படங்களில் மட்டும் நடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கார்ப்பரேட் நிறுவனங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. அதன் முதற்கட்டமாக தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூல் கணக்கில் ஆதிக்கம் செலுத்தும் முதல் நிலை நடிகர்களின் கால்ஷீட்டை கைப்பற்றும் முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. அதன் முதற்கட்டமாக அஜித், விஐய் இருவரையும் தலா ஐந்து படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தொலைத் தொடர்பு தொழிலில் முதன்மை நிறுவனமாக இருக்கும் வட இந்திய நிறுவனம் முயற்சித்தது.

ஒரு படத்திற்கு நூறு கோடி ரூபாய் சம்பளம் ஐந்து படங்களில் தொடர்ச்சியாக நடிக்க கால்ஷீட் தர வேண்டும். 200 கோடி அட்வான்ஸ் என்ற திட்டத்துடன் அஜித், விஜய் ஆகிய இருவரையும் சந்திக்க நேரம் கேட்டனர் இந்நிறுவனத்தினர். தொழில் முறை போட்டியாளர்களான இவர்கள் இருவரும் அவர்களது திட்டம் என்ன என்பதை அறிந்து கொண்டு சந்திக்க மறுத்து விட்டனர்.

ஒரு புதிய படத்தில் நடிக்க வருமான வரி, GST என அனைத்தும் சேர்த்து ஐம்பது கோடி ரூபாய் வரை வாங்கும் அஜித் - விஜய் இருவரும் ஒரு படத்தில் நடிக்க 100 கோடி ரூபாய் சம்பளம் தர தயாராக இருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கடிவாளத்தில் சிக்காமல் தப்பியிருக்கிறார்கள்.

1988ஆம் ஆண்டு தமிழ் சினிமா தயாரிப்பு தொழிலை கார்ப்பரேட் மயமாக்க மறைந்த தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரனால் தொடங்கப்பட்ட கார்ப்பரேட் சதுரங்கத்திற்குள் நடிகர்களும் -தயாரிப்பாளர்களும் அவ்வப்போது சிக்கி கொண்டாலும் தப்பி வந்திருக்கிறார்கள்.

தற்போது தென்னிந்திய சினிமாவை மொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

அஜித், விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்க மறுத்ததற்கு என்ன காரணம்?

நாளை..

குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

ஆசிரியர் குறிப்பு

இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விவரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான ‘தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.

முந்தைய பகுதி - தனுஷ் பட ரிலீஸ் சிக்கல்: தீர்த்து வைப்பாரா சிவகார்த்தி?

ஞாயிறு, 14 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon