மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 13 நவ 2019

திருப்பூர்: விஷவாயு தாக்கி 4 பேர் பலி!

திருப்பூர்: விஷவாயு தாக்கி 4 பேர் பலி!

தமிழகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) திருப்பூரில் 4 வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, “1993 முதல் இதுவரை நாடு முழுவதிலும் 323 துப்புரவுத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இதில் மிக அதிகமாகத் தமிழகத்தில் 144 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.

விஷவாயு தாக்கி ’மூன்று பேர்’, நான்கு பேர்’,’ஐந்து பேர்’ எனத் தொழிலாளர்கள் கொத்து கொத்தாக மடிவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மார்ச் 26ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், கார்த்திக், லட்சுமி பதி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமை ஆகாத நிலையில் திருப்பூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையத்தில் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார். இங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அடைத்து வைத்திருந்த தொட்டியைத் தொழிலாளர்கள் சுத்தம் செய்துள்ளனர்.

அப்போது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் பரூக் அகமது விஷவாயு தாக்கி உள்ளே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை காப்பாற்ற தில்வார் உசேன், அன்வர் உசேன், அபு என ஒருவர் பின் ஒருவராய் உள்ளே இறங்கியுள்ளனர். மூவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து பரூக் அகமது உட்பட நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி வாளி மூலம் கழிவுநீரைச் சுத்தம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

ஞாயிறு, 14 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon