மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

ரூட்டை மாற்றி ஹிட்டடித்த இனியா

ரூட்டை மாற்றி  ஹிட்டடித்த இனியா

தமிழ், மலையாளத் திரையுலகில் வலம் வரும் இனியா தற்போது கன்னடத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

வாகை சூடவா, யுத்தம் செய், மௌன குரு என தனது தொடக்க படங்களில் தனித்துவமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார் இனியா. ஆனால் அதன் பின் வெளியான அவர் படங்கள் பெரியளவில் பேசப்படாததால் தொடர்ச்சியாக அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் மீண்டும் மலையாளத் திரையுலகிற்கே திரும்பினார். அங்கு அவருக்கு நடிப்பதற்கு சவாலான, நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைய சிறந்த நடிகையாக விருதுகளைப் பெறுவதுடன் ரசிகர் வட்டாரத்தையும் அதிகப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் இரண்டாவது சிறந்த நடிகையாக கேரளா திரைப்பட விமர்சகர்கள் விருதை பரோல், பெங்காலியா ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். பிரேம் நஷீர் பவுண்டேஷனின் சிறந்த நடிகைக்கான விருதை பரோல் படத்திற்காகப் பெற்றுள்ளார். மலையாளத்தில் கிடைத்துள்ள இந்த வரவேற்பைத் தொடர்ந்து இனியா தற்போது கன்னடத் திரையுலகில் களமிறங்கவுள்ளார்.

அறிமுகமாகும் முதல் படத்திலேயே இனியா சிவ ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். துரோனா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரமோத் சக்கரவர்த்தி இயக்குகிறார்.

இதுதொடர்பாக அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “முதல் படத்திலேயே அவருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வாகை சூடவா எனக்கு தமிழின் சிறந்த அறிமுகப் படமாக அமைந்தது. அதைப்போல் கன்னடத்திற்கு துரோனா இருக்கும். இதன் மூலம் எனக்கு இங்கு பல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஞாயிறு, 14 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon