மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 அக் 2019

புகழேந்தி வாகனம் மீது தாக்குதல்: தினகரன் கண்டனம்!

புகழேந்தி வாகனம் மீது தாக்குதல்: தினகரன் கண்டனம்!

ஓசூரில் அமமுக வேட்பாளர் புகழேந்தியின் பிரச்சார வாகனம் தாக்கப்பட்டதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓசூர் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டியும், திமுக சார்பில் எஸ்.ஏ.சத்யாவும், அமமுக சார்பில் அக்கட்சியின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். தமிழகத்தின் பல இடங்களில் நடைபெறுவது போலவே ஓசூரிலும் அதிமுக-அமமுக நிர்வாகிகள் இடையே பிரச்சினை இருந்துவருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு புகழேந்தியின் பிரச்சார வாகனம் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரச்சாரத்திற்காக கட்டப்பட்டிருந்த பேனரையும் அவர்கள் கிழித்துச் சென்றுள்ளனர். இந்த நேரத்தில் வாகனத்தில் புகழேந்தி இல்லாததால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. வாகனம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் புகழேந்தி தலைமையில் அமமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், “ அமமுகவுக்கு ஆதரவு பெருகி வருவதை துரோகிகளாலும், எதிரிகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வன்முறையைக் கையிலெடுத்து அதன் மூலம் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களை அச்சுறுத்த நினைக்கிறார்கள். அப்படித்தான் ஓசூர் வேட்பாளர் புகழேந்தியின் பிரச்சார வாகனத்தை அடித்து உடைத்திருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக வேட்பாளர் அப்போது வாகனத்தில் இல்லாததால், உயிர் தப்பி இருக்கிறார். தோல்வி பயத்தால் இப்படி வன்முறையைக் கையிலெடுத்துள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.

தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது காவல் துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தினகரன், தேர்தல் களத்தில் வன்முறையாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஞாயிறு, 14 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon