மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

திட்டமிட்டு வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள்: சீமான்

திட்டமிட்டு வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஏப்ரல் 13) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மக்கள் செல்லும் பாதையில்தான் தேர்தல் பறக்கும் படை சோதனை மேற்கொள்கிறது. பொதுமக்களின் பணத்தைத்தான் இவர்கள் பிடிக்கிறார்களே தவிர, பணம் கொடுப்பவர்களைத் தடுக்க முடியவில்லை. சாலையில் பயணிக்கும் மக்களுக்குத் தொல்லை கொடுக்கும் செயலாகவே இதைப் பார்க்கிறேன். பணம் கொடுப்பவர்கள் ரூ.50 கோடி, ரூ.100 கோடி என முதலீடு செய்கின்றனர். அவர்கள் எங்கே பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் எனவும் தெரியும். அப்பணத்தைக் கைப்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என அதிமுக கூறுகிறது; ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறாரே எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த சீமான், “இருவேறு கொள்கை முரண் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும்போது இதெல்லாம் ஏற்படும். கச்சத்தீவை மீட்போம் என திமுக கூறுகிறது. ஆனால், கச்சத்தீவு கொடுக்கப்பட்டது அவ்வளவுதான் என காங்கிரஸின் நிலைப்பாடு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நாம் கூறுகிறோம். ஆனால், அந்தக் கட்சிகள் அனைத்தும் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்க மாட்டார்கள். நீட் தேர்வைக் கொண்டுவந்தவர்களே அதை ரத்து செய்ய மாட்டார்கள்” என்று கூறினார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் உங்களது சின்னம் தெளிவாகப் பொறிக்கப்படவில்லையே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த சீமான், “நாங்கள் போராடிப் பெற்ற சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். எங்களைப் போன்ற அரசியல் கட்சிகள் வளர்ச்சியில் அவர்களுக்குப் பிரச்சினையிருக்கிறது. இதேபோல ஆந்திராவில் பவன் கல்யாணுக்கும் செய்திருக்கிறார்கள். இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களது சின்னத்தைச் சிறியதாக மங்கலாகப் பொறித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon