மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 14 ஏப் 2019

பாசிசத்தைத் தேர்தல் வீழ்த்துமா?

பாசிசத்தைத் தேர்தல் வீழ்த்துமா?

சேது ராமலிங்கம்

நடைபெற்றுவரும் பொதுத் தேர்தல் இந்திய வரலாற்றில் மற்ற தேர்தல்களைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியா இனியும் இந்தியாவாக இருக்கப் போகிறதா என்பதைத் தீர்மானிக்கப் போகின்றன. பன்முகத்தன்மை வாய்ந்த, சமயச் சார்பில்லாத இந்தியாவாக நீடிக்குமா அல்லது மதவாத அரசாக பாசிசப் பண்பாட்டு ஒருமை கொண்டதாக மாறுமா என்பது தீர்மானிக்கப்படவிருக்கிறது.

தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி தோல்வி அடைவதற்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்குமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதே சமயம் வடமாநிலங்களில் பாஜகவின் தோல்வி குறித்து நிச்சயமற்ற சூழலே நிலவுகிறது. இந்த நிலையில் தேர்தல் மூலம் பாசிசம் வீழ்த்தப்பட முடியுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

வரலாற்று ரீதியாக பாசிசம் குறித்த புரிதலிருந்து அதன் தன்மைகளையும் அதை எதிர்கொள்ளும் வழிகளையும் குறித்து ஆராய்வோம்.

முதலாளிய நெருக்கடியின் கோர முகம்

பாசிசம் என்பது சமூகப் பொருளாதார நிகழ்வு. முதன்முதலில் 1919இல் இத்தாலியில் தோன்றியது. லாபத்திற்காக மிதமிஞ்சிய அளவில் உற்பத்தி செய்யும் முதலாளிய உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடிக்குத் தீர்வாகவே பாசிசம் உருவெடுக்கிறது. அதிகமான அளவில் உற்பத்தி செய்யப்பட்டுக் குவிக்கப்பட்ட சரக்குகளை வாங்க சந்தைகள் இல்லாதபோது அவை தேங்க ஆரம்பித்து நெருக்கடி உருவாகிறது. பொருளாதார நெருக்கடிகள் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வெடிப்பதற்கு வழி வகுக்கின்றன. அப்போது ஆட்சியாளர்கள் அடிப்படை உரிமைகளையும் அரசியல் சட்டத்தையும் ரத்து செய்து அடக்குமுறை ஆட்சியை நடத்துகின்றனர். அரசியல் அரங்கிலும் பொருளாதார அரங்கிலும் உள்ள போட்டியாளர்களை ஒழித்துக் கட்டிவிட்டு ஒரு கும்பலோ அல்லது ஒரு பிரிவினரோ அனைத்து ஆதிகாரங்களையும் குவித்துக்கொண்டு கொடூரமான ஆட்சியை நடத்துவதுதான் பாசிசமாகும். சுருக்கமாகச் சொன்னால் அது முதலாளிய நெருக்கடியின் கோர முகமாகும்.

உலகம் முழுவதும், குறிப்பாகப் பல ஐரோப்பிய நாடுகளில் 1930களிலிருந்து 1945 வரை பாசிஸ்ட்டுகளின் ஆட்சிகள் நடைபெற்றன. இத்தாலியின் பெனிட்டோ, முசோலினி, ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர், ஸ்பெயினில் பிரான்சிஸ்கோ பிரான்கோ, போர்ச்சுகலில் ஆன்டனியோ டி ஆலிவெய்ரா ச‘லாஸார், பிரான்சில் பிலிப்ஸ் பேட்டேய்ன், ஹங்கேரியில் மிக்லோஸ் ஹோர்த்தி, ரொமானியாவில் லான் ஆன்டனெஸ்கு மற்றும் குரோஷியாவில் ஆண்டே பாவெலிக் ஆகியோரின் பாசிச ஆட்சிகள் உலகம் முழுவதற்குமான எச்சரிக்கைப் பாடங்களாக விளங்குகின்றன.

நமது நாட்டிலும் இதுபோன்ற பாசிச ஆட்சி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது அமல்படுத்தப்பட்டது. 2014இல் இருந்து 2019 வரையிலான மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை இரண்டாவது பாசிச ஆட்சி எனலாம். இரண்டுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் உள்ளன.

பாசிசப் பண்பாடும் பாசிச அதிகாரமும்

இந்திரா காந்தியின் எமர்ஜென்சியின்போது அரசு, அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அரசியல் எதிரிகளாகக் கருதப்பட்டவர்களைச் சிறையில் தள்ளியது. பத்திரிகைகள் ஒடுக்கப்பட்டன. சிறுபான்மையினர் குறிவைத்து ஒடுக்கப்படவில்லை. பாசிசக் கருத்தியலும் பண்பாடும் பரப்பப்படவில்லை. ஆனால், மோடியின் ஆட்சியில் பாசிசக் கருத்தியல் பரப்பலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது சிறுபான்மையினர் மீது குறிப்பாக, முஸ்லிம்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் என்ற பெயரில் முஸ்லிம்கள் இந்துத்துவக் கும்பல்களால் அடித்தே கொல்லப்பட்டனர். பாஜகவின் கருத்தியலையோ அல்லது இந்து மதத்தையோ விமர்சித்து எழுதிய படைப்பாளிகளும் கலைஞர்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். பகுத்தறிவாளர்கள், அறிஞர்கள் கொல்லப்பட்டனர்.

அரசை விமர்சித்துப் பேசிய மாணவர்கள் முடக்கப்பட்டனர். பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டு தேசத்துரோக வழக்குகள் தொடரப்பட்டன. பாஜகவின் பாசிச ஆட்சியில் அறிவாளிகள் மட்டும் தேவையில்லாதவர்களாகக் கருதப்படவில்லை; அறிவே தேவையில்லை என எழுத்தாளர் அருந்ததி ராய் இதைச் சரியாகவே குறிப்பிட்டார். பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக மதவெறியூட்டும் பேச்சுகளைப் பேசிவந்தனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் ஆசிகளோடு நடந்தன. அரசும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகச் செயல்பட்டது. கார்ப்பரேட்டுகளின் நலன்களைக் காப்பதே பாசிசம் என அன்றே பாசிசம் எனப் பெயர் சூட்டிய முசோலினி குறிப்பிட்டது உண்மையாக்கப்பட்டது. எனவே இது எமர்ஜென்சியைவிடப் பல மடங்கு மோசமான ஆட்சியாக இருந்தது.

பாசிசத்தைத் தேர்தலில் வீழ்த்திவிட முடியுமா?

தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் பாசிச பாஜக ஆர்எஸ்எஸ்ஸை வீழ்த்திவிடலாம் என சில அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்தத் தேர்தல் இந்தியச் சமூகத்தையும் அரசியல் அமைப்பையும் பாசிசமயமாக்கிடும் முயற்சிகளுக்கு சில காலம் முட்டுக்கட்டை போட மட்டுமே வாய்ப்பு ஏற்படுத்தும். நிரந்தரமாக அல்ல.

சமூகத்தை பாசிசமயமாக்குவது குறித்துக் கூடுதலாகச் சில விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 1930களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்ததைப் போன்று பாசிச அரசாக தற்போது உருவாகவில்லை. சமூகமும் பாசிசமயமாக்கப்படவில்லை (அன்று யூதர்களுக்கெதிராக ஜெர்மானியர்களின் மனநிலை இருந்ததைப் போன்று இன்று இல்லை). ஆனால், அதற்கான முயற்சிகள் நடைபெற்றன. நாடாளுமன்ற ஜனநாயக அரசமைப்பை இந்துத்துவ சக்திகள் 2014இல் தேர்தலின் மூலம் கைப்பற்றின. அதன் பின்னர் அவை தங்களின் நோக்கத்திற்கேற்ப நாடாளுமன்ற ஜனநாயக அரசமைப்பின் நிறுவனங்களை மாற்றத் தொடங்கின. திட்ட ஆணையத்தை மாற்றின. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்கள், சுற்றுச்சூழல் சட்டங்களைத் திருத்தினர். சிபிஐயைக் கட்டுப்படுத்துவது விமர்சன அறிவை வளரவிடாமல் தடுக்கப் பல்கலைக்கழகங்களை ஒடுக்கியது, அறிவியல் மாநாட்டில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களை முன்வைத்தது எனத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர். மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் மீது கும்பல் படுகொலைகள், தாக்குதல்களை நடத்துவதற்கு மறைமுகமாக ஊக்குவித்தனர். இவை ஒட்டுமொத்தச் சமூகத்தையும் மக்களின் மனங்களையும் பாசிசமயமாக்குவதற்கான தொடக்கக் கால முயற்சிகளாகும்.

இந்த நடவடிக்கைகள் தொடர்வதற்கு அவர்களின் தேர்தல் தோல்வி இடைக்காலத் தடை விதிக்கலாம். ஆனால், அது நிரந்தரத் தடையாக இருக்காது. ஏனெனில் முதலாளிய உற்பத்தி முறையும் புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளும் நாட்டை மறுபடியும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளும். புதிய தாராளவாதக் கொள்கைகளை எந்த அரசும் வாபஸ் பெற முடியாது. காங்கிரஸிடமும் மாற்றுக் கொள்கைகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. தாராளவாதக் கொள்கைகள் மீண்டும் நெருக்கடியைக் கொண்டுவரும்போது அந்த அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு மீண்டும் புதிய மோடிகள் வர முடியாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்தியாவில் பாசிசத்தை வேரறுக்க நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களைத் தோற்கடிப்பது முதல் நடவடிக்கை. ஆனால், அதையும் தாண்டி மக்கள் பாசிசத்தைப் புரிந்துகொள்ளவும் உணரவும் வைக்க நீண்ட காலப் பணிகள் காத்திருக்கின்றன.

துணை நின்றவை:

Return to Fascism by Samir Amin, Only people make their own history- A collection of political essays 2000-2018, Published by Leftword, New Delhi

Shadows of Fascism, Prabhat Patnaik, Frontline election special -1

பாசிசம், எம்.என். ராய், விடியல் வெளியீடு, 1999.

ஞாயிறு, 14 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon