மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: ஐடி அதிரடி ரெய்டு ! எடப்பாடி அதிர்ச்சி, அதிகாரிகள் புரட்சி!

டிஜிட்டல் திண்ணை: ஐடி அதிரடி ரெய்டு ! எடப்பாடி அதிர்ச்சி, அதிகாரிகள் புரட்சி!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் அப்டேட் கேட்டது. அப்டேட் வெர்ஷனில் அப்டேட் செய்தி வந்தது.

“தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் நேற்று (ஏப்ரல் 12) காலை முதல் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் நடந்த வருமான வரித்துறையின் அதிரடி ரெய்டு வழக்கத்துக்கு மாறாக ஆளுங்கட்சி வட்டாரத்தை கதிகலக்கியிருக்கிறது.

கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தள அமைச்சர் புட்டராஜு , தமிழகத்தில் வேலூரில் திமுக முக்கியத் தலைவர் துரைமுருகன், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் என்று பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து தொடர்ந்து ரெய்டுகள் நடந்து வந்தன. ஆச்சரியமாய் தமிழகத்தில் சென்னையில் சபேசன் என்ற ஆளுங்கட்சிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் வீட்டில் ரெய்டு நடந்தது. ஆனால் அதுபற்றிய வீடியோக்கள் வெளிவராத நிலையில், அரக்கோணம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், ‘துரைமுருகன் வீட்டு ரெய்டு வீடியோ மட்டும் வெளிவருகிறது. சபேசன் வீட்டு ரெய்டு வீடியோ ஏன் வெளிவரவில்லை?’ என்று கேட்டார். சில மணி நேரங்களில் சபேசன் வீட்டு ரெய்டு வீடியோ காட்சிகளும் கசிந்தன.

தமிழ்நாடு உளவுத்துறை ஆங்காங்கே லோக்கல் உளவுத்துறையினர் மூலம் திமுகவினர் வைத்திருக்கும் பணம் பற்றிய தகவலைக் கண்டுபிடித்து வருமான வரித்துறைக்கு கொடுக்க, உடனடியாக வருமான வரித்துறையினர் ரெய்டுக்காக படையெடுத்து வருகின்றனர். பாஜக கூட்டணி ஆட்சிகளின் உளவுத்துறையினர் கொடுக்கும் தகவல்படி வருமான வரித்துறையினர் எதிர்க்கட்சியினர் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள் என்பதுதான் வருமான வரித்துறையினர் மீதான விமர்சனமாக இருந்து வருகிறது.

ஆனால் இதற்கு மாறாக நேற்று பி.எஸ்.கே நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் நேற்று (ஏப்ரல் 12) நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் சுமார் 14 கோடி ரூபாய் அளவிலான ரொக்கப்பணமும், பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த பிஎஸ்கே நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமி நாமக்கல், சேந்தமங்கலம் நடுகோம்பையைச் சேர்ந்தவர். அவர் வீடும் அங்குதான் உள்ளது. அமைச்சர் தங்கமணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். நேற்று காலை பிஎஸ்கே வீட்டில் ரெய்டு என்றதுமே தங்கமணிக்கும், எடப்பாடிக்கும், ஓ.பன்னீருக்கும் தகவல் கிடைத்து அதிர்ந்து விட்டார்கள். அதுவும் நாமக்கல், சென்னை உள்ளிட்ட பிஎஸ்கே தொடர்பான இடங்களில் ரெய்டு என்றதுமே ஆளுங்கட்சியினருக்கு அடிவயிறு கலங்கியது. இந்த அதிர்ச்சிக்குக் காரணம் முதல்வருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் எப்படி ரெய்டு நடக்கிறது என்பதுதான். ஒருவேளை பிஜேபி பழையபடி தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதா என்று கூட ஒரு கணம் அதிமுக டாப் லெவலில் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

உடனடியாக தங்கமணி தரப்பில் இருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு போன் போடப்பட்டது. நேற்று பியூஷ் கோயல் சென்னையில்தான் இருந்தார். மதியம் கமலாலயத்தில் பிரஸ்மீட் கொடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம், ‘என்ன நமக்கு நெருக்கமானவங்க வீட்லயே ரெய்டு நடக்குது. உடனடியாக பேசி நிறுத்தச் சொல்லுங்க’ என்று தங்கமணி தரப்பில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அவரோ, ‘நான் என்னன்னு விசாரிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில் சென்னை, நாமக்கல் நகரங்களில் உள்ள பிஎஸ்கே நிறுவனத்தின் அலுவலகம், பெரியசாமியின் குடும்பத்தினர் வீடு என 7 இடங்களில் ரெய்டு தீவிரமானது. ரெய்டுக்கு வந்த அதிகாரிகளிடம் வீட்டில் இருந்த பெண்கள் குறிப்பிட்ட ஒரு அறையின் சாவியைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். தங்களுக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் கூறியிருக்கிறார்கள். அப்படியானால் விசாரணைக்கு வாருங்கள் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கெடுபிடி காட்ட, அதன் பிறகே சாவி கொடுக்கப்பட்டது. இப்படியாக நடந்த சோதனையில் நேற்று மட்டும் 14.5 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டுகள் பற்றி வருமான வரித்துறை வெளியே தெரிவிப்பது கிடையாது என்ற ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் வகையில் உடனடியாக நேற்று மாலையே கத்தை கத்தையாக பணம் கைப்பற்றப்பட்ட போட்டோக்களையும் வெளியிட்டனர். ரெய்டு தகவலை விட எடப்பாடிக்கு இது மேலும் அதிர்ச்சிகரமாக இருந்தது. பியூஷ் கோயல் டெல்லிக்கு பேசி மேலே இருந்து பிரஷர் வருவதற்குள்ளாகவே கைப்பற்றப்பட்ட பணம் பற்றி உரியவர்களிடம் கையெழுத்து வாங்கியதோடு, போட்டோக்களையும் வருமான வரித்துறையினர் வெளியிட்டனர். பியூஷ் கோயல் மேலே சொல்லியும் கூட இன்றும் பிஎஸ்கே நிறுவனம் தொடர்பான இடங்களில் தொடர்ந்து ரெய்டு நடக்கிறது.

வருமான வரித்துறையை தன் கைப்பாவையாக மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது என்ற புகார்களுக்கு மத்தியில், அதே வருமான வரித்துறை பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக மேலிடத்தினருக்கு நெருக்கமானவர்களிடம் இரண்டு நாட்களாக ரெய்டு நடத்துவது எப்படி? இந்த கேள்விதான் அரசியல் வட்டாரங்களை உலுக்கி வருகிறது.

இதற்கான பதில் வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்தே கிடைத்திருக்கிறது. அதாவது தொடர்ந்து எதிர்க்கட்சியினரைக் குறிவைத்து ரெய்டு நடத்துவதும், அதை பாஜக தனது தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதும் வருமான வரித்துறையில் உள்ள அதிகாரிகள் பலருக்கே பிடிக்கவில்லை. வருமான வரித்துறையை ஏதோ மோடியின் ஏவல்துறையாக மாற்றுவது போன்ற இந்த நடவடிக்கையால் அத்துறையின் பெயர் கெடுவதாக அவர்கள் கருதியிருக்கிறார்கள்.

இந்நிலையில் வருமான வரி புலனாய்வுத் துறைக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து பிஎஸ்கே நிறுவனத்தில் ரெய்டு செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்., பொதுவாகவே வருமான வரித்துறையில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு ரெய்டு செல்ல வேண்டுமென்றால் அரசின் அனுமதியோ, உயர் அதிகாரிகளின் அனுமதியோ தேவையில்லை. தகவல் நம்பகமான, உறுதியான தகவல் என்றால் ரெய்டு பிரிவு அதிகாரிகளே வேட்டைக்குப் போவது பற்றி முடிவெடுக்கலாம். அதன்படிதான் இந்த பிஎஸ்கே ரெய்டும் நடந்திருக்கிறது.

ரெய்டு நடந்து செய்திகள் வந்தபிறகுதான் பியூஷ் கோயலின் கவனத்துக்கே இது சென்றிருக்கிறது. அதற்குள் ரெய்டுக்கான அனைத்து நியாயங்களும் அதிகாரிகளால் பெறப்பட்டுவிட்டன. எனவேதான் பாஜக தலையிட்டும் கூட ரெய்டு இன்றும் தொடர்கிறது. கணக்கில் காட்டப்படாத பணத்தை யார் வைத்திருந்தாலும் பாரபட்சமின்றி தயவு தாட்சண்யம் இன்றி கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்த அதிகாரிகள்தான் இந்த ரெய்டை நடத்தியுள்ளனர். இன்று வரை சுமார் 30 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் முதலீடு செய்த பல கோடிக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இந்தப் பணம் தேர்தலுக்காக விநியோகிக்க வைத்திருந்த பணம் என்றும் சொல்லப்படுவதால், அதிமுவினருக்கு திடீர் ஷாக் ஆக அமைந்திருக்கிறது. அதிமுகவினருக்கு மட்டுமல்ல... வருமான வரித்துறை அதிகாரிகளுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த கோபம் மத்திய அரசுக்கும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் யாருக்கும் ஏவல்துறை அல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லும் வகையில் வருமான வரித்துறையினர் நடத்திய புரட்சியாகவே இந்த ரெய்டு பார்க்கப்படுகிறது” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.

உடனடியாக இத்தகவலை ஷேர் செய்யும் பணிகளில் இறங்கியது ஃபேஸ்புக்.

சனி, 13 ஏப் 2019

அடுத்ததுchevronRight icon