மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 16 செப் 2019

தமிழ் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

தமிழ் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

நாளை தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவதையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விகாரி ஆண்டு நாளை (ஏப்ரல் 14) பிறக்கவுள்ளதையொட்டி, தமிழக மக்களுக்குத் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இன்று (ஏப்ரல் 13) ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் “தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. வீரத்தோடு கூடிய அன்பு, இரக்கம் ஆகியவற்றால் உலக அளவில் தமக்கென தனி அடையாளத்தைப் படைத்திருக்கின்றனர் தமிழ் மக்கள். நேர்மை, ஒழுக்கம், அமைதி ஆகியவற்றில் முன்னோடியாகத் திகழ்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் ‘தமிழனென்ற பெருமையோடு தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற வரிகளை மேற்கோள் காட்டி தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு மலரட்டும் என்று கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலைத் தமிழர்கள் அனைவரும் மனதில் கொண்டு மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிற அரசுகளுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க தமிழ் புத்தாண்டில் சூளுரை மேற்கொள்ள வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி.

‘தாரை வார்க்கப்பட்ட காவிரி உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் மீட்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் விருப்பம் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அந்த விருப்பம் நிறைவேறும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்த சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழக மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon