மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஏப் 2019

கட்டப்பாவுக்கு வேலை வந்துருச்சு!

கட்டப்பாவுக்கு வேலை வந்துருச்சு!

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

சத்யராஜ் கதாநாயகனாக, குணசித்திர நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இந்தியா முழுவதும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்னம் மெகா கூட்டணியை அமைத்துவரும் நிலையில் அதில் சத்யராஜ் இணையவுள்ளார். நாவலில் இடம்பெற்றுள்ள பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் அவரை நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் 1985ஆம் ஆண்டு வெளியான பகல் நிலவு படத்தில் சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தக் கூட்டணி 29 ஆண்டுகளுக்குப் பின் இணையவுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. தற்போது மணிரத்னம் நடிகர்கள் தேர்வில் கவனம் செலுத்திவருகிறார். விக்ரம், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா ராய் ஆகியோரிடமும் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon