மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

எடப்பாடி தமிழனா இல்லையா? பொன் ராதா

எடப்பாடி தமிழனா இல்லையா? பொன் ராதா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் நேற்று (ஏப்ரல் 12) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன், “ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வராமல் இருப்பதுதான் நல்லது. தமிழனே தமிழ்நாட்டை ஆளுவான். தற்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருப்பது தமிழனா அல்லது வேறு எங்கிருந்தும் வந்தவரா?

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழரா இல்லையா என நான் கேட்கிறேன். அவர் பச்சைத் தமிழன். யார் யார் எங்கிருந்து வந்தவர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபல தலைவருக்குக்கூட பாதுகாப்பில்லை. குஷ்பு போன்ற தலைவருக்கும் சில்மிஷம் செய்கிறார்கள்” என்று பேசினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பெருந்திரளான கூட்டம் திரண்டது. கூட்டத்திற்கு மத்தியில் குஷ்பு நடந்து சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த நபர் ஒருவர் குஷ்புவை தவறான முறையில் தொட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த குஷ்பு பின்னால் திரும்பி அந்த நபரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு குஷ்புவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 12 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon