மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியதை ரத்து செய்ய கோரிக்கை!

சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியதை ரத்து செய்ய கோரிக்கை!

அரசு நலத்திட்டங்கள் தொடக்க விழா மற்றும் அதிமுக ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த மார்ச் 6 ஆம் தேதி பிற்பகல் சென்னை வந்த பிரதமர் மோடி அந்த விழாவில் பேசும்போது, “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரால் இனி அழைக்கப்படும்” என்று அறிவித்தார். இதற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையிலேயே சென்னை சென் ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் முதல் பெயர் பலகைகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று மாற்றப்பட்டன. அத்தோடு ரயில்களில் எழுதப்பட்டும் பெயர்களும் மாற்றப்பட்டன. ரயில் நிலையங்களில் வெளியிடப்படும் குரல் அறிவிப்புகளிலும் இந்த பெயர் மாற்றம் அமலாகிவிட்டது.

இந்த நிலையில், “சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு திடீரென பெயர் மாற்றியதால் பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த பெயர் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று ஆன்லைன் கோரிக்கை விண்ணப்பம் ஒன்று தயார் செய்யப்பட்டு அதில் பலரது கையெழுத்துகள் கோரப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் தயாரித்திருக்கும் அந்த கோரிக்கை மனுவில்,

“நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் தேர்தல் விதிமுறை அமுலில் இருக்கும் போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்வது சரியாக இருக்காது. இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அடுத்து வரும் ஆட்சியில் அவர்கள் தலைவரின் பெயரை எழும்பூர்க்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். தன் தந்தை கலைஞர் பெயரை எழும்பூருக்கு சூட்ட வேண்டும் என்று மு.க. அழகிரி கூட கோரிக்கை வைத்தார். அடுத்து ஜாதி கட்சிதலைவர் அவர் ஜாதியை சார்ந்தவர் பெயரை ஓர் ரயில் நிலையத்துக்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார். தமிழகத்தில் இவ்வாறு தலைவர்களின் பெயர்கள் வைப்பதால் பிரச்சனைகள் வரும் என்றுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு தலைவர்களின் பெயரையும் அனைத்து போக்குவரத்து கழகங்கள், மாவட்டத்தின் பெயர்களை தமிழக அரசு நீக்கியது.

மேலும் சென் ட்ரல் பெயர் மாற்றத்தால் வெளி மாநிலப் பயணிகள் மற்றும் தமிழகத்திலேயே பல பயணிகள் முறையான தகவல் தெரியாமல் சென் ட்ரல் ரயில் நிலையத்தைத் தவறவிட்டுவிடுகிறார்கள். ஆகவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்யும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்” என்று அந்த கோரிக்கை மனுவில் கோரப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியத் தலைவர், தென்னக ரயில்வே பொதுமேலாளர், தென்னிந்திய டிவிஷனல் ரயில்வே மேலாளர், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு ஆன்லைனில் இந்த கோரிக்கை மனுக்கள் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon