மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

சர்ச்சைப் பேச்சு: மேனகா காந்திக்கு நோட்டீஸ்!

சர்ச்சைப் பேச்சு: மேனகா காந்திக்கு நோட்டீஸ்!

பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக சுல்தான்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

அவ்வகையில், துரப் கானி கிராமத்தில் ஏப்ரல் 11ஆம் தேதியன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேனகா காந்தி அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களிடம் பேசுகையில், “இத்தேர்தல் மிக முக்கியமானது. நான் நிச்சயமாக வெற்றிபெறுவேன். மக்களின் அன்பு, ஆதரவால் நான் வெற்றிபெறுவேன். ஆனால் என் வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லையெனில் எனக்கு மகிழ்ச்சி இருக்காது.

பிறகு இஸ்லாமியர்கள் என்னிடம் ஏதும் உதவி கேட்டுவரும்போது, எனக்கு பெரிதாக தெரியாது. நான் அவர்களை விட்டுவிடுவேன். அவர்களால் என்ன ஆகிவிடப்போகிறது? இதெல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் இல்லையா? நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் பிள்ளைகள் இல்லையா? நீங்கள் (இஸ்லாமியர்கள்) இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் வெற்றிபெறுவேன். இத்தேர்தலில் நான் ஏற்கெனவே வெற்றிபெற்றுவிட்டேன். ஆனால் உங்களுக்கு நான் தேவைப்படுவேன்” என்று கூறினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

மேனகா காந்தியின் பிரிவினைவாத பேச்சுகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, “நான் இஸ்லாமியர்களை மிகவும் விரும்புகிறேன். நான் இத்தேர்தலில் வெற்றிபெறுகிறேன். அந்த வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு சுவையூட்ட வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் பேசினேன். எனது கருத்தை ஊடகங்கள் தவறாக திரித்து செய்தி வெளியிட்டுள்ளன” என்று மேனகா காந்தி விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மேனகா காந்திக்கு சுல்தான்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவ்விவகாரத்தில் விளக்கம் அளிக்க மேனகா காந்திக்கு மூன்று நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon