மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

இளைய நிலா: ஆனா, பயமா இருக்கு…!

இளைய நிலா:  ஆனா, பயமா இருக்கு…!

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 40

ஆசிஃபா

‘எனக்கு இந்த வேலை பிடிக்கல. ஆனா, வீட்ல எப்டி சொல்றதுன்னு தெரியல’.

‘எனக்கு அவங்கள பிடிக்கும். ஆனா, சொன்னா என்னாகுமோன்னு பயமா இருக்கு’.

‘கேக்கலாம்னு தோணுது. ஆனா, எப்படி எடுத்துக்குவாங்களோன்னு பயமா இருக்கு.’

இப்படிப் பல சூழல்களில் பலரும் புலம்பியிருப்போம். அது வேலை, காதல், வீட்டுப் பிரச்சினை, பிடிக்காத வாழ்க்கைமுறை என்று எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். நம் வாழ்வின் பெரும்பான்மையான நேரங்களில் நாம் தயங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.

என்ன காரணம்? என் விஷயத்தில், நான் தோல்வி அல்லது மறுப்பை எதிர்கொள்ள பயப்படுவேன். சிறு வயதிலிருந்தே எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்ந்த நான், ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாவற்றிலும் நான் mediocreதான் என்று புரிந்துகொள்ள நேர்ந்தது. அப்போதிருந்து தொடங்கியது இந்த இன்செக்யூர் உணர்வு. அதுவரை பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று அனைத்திலும் பங்கேற்றிருக்கிறேன். இப்போதும் பங்கேற்பேன். ஆனால், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், முன்பெல்லாம், தைரியமாக சந்தேகமில்லாமல் கலந்துகொள்வேன். தோற்றாலும், ‘சரி ஓகே!’ என்று சொல்லிவிட்டு வருவேன். அதன் பிறகு, ‘வாழ்வா சாவா’ நிலைக்கு வந்து நின்றேன்! பார்த்தால் சாதாரணமான போட்டி, ஆனால் அதற்கு நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தால், நம்மையே அறியாமல் பயமும் தயக்கமும் ஏற்படுகிறது.

இவ்விஷயத்தைப் புரிந்துகொள்ள எனக்கு ஏறத்தாழ 5 - 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் தோற்றாலும், ஜெயித்தாலும், நம்மைப் பிறர் ஏற்றாலும், மறுத்தாலும், நம் வாழ்க்கை அப்படியே போய்க்கொண்டே இருக்கப்போகிறது என்று. இப்போதும் அவ்வப்போது தயக்கம் வந்து போனாலும், பெரும்பாலும் அப்படி நான் இருப்பதில்லை.

நான் மேலே சொன்னது மிகச் சாதாரணமான விஷயம். ஆனால், தயக்கமும் பயமும் எப்போது நம் வாழ்வில் நிஜமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், உறவுகளில். குறிப்பாகக் காதலில். நீண்ட காலமாகக் காதலைச் சொல்லாமல், ஒருதலையாகவே காதலித்துக்கொண்டிருப்பது இன்று பலரும் செய்யும் விஷயம். பெரும்பாலும், எங்கே நம்மை வேண்டாம் என்று மறுப்பார்களோ என்ற பயமே காரணம். இப்படி நாம் ஏதோ ஒரு காரணத்திற்காக, பயந்தும், தயங்கியும் நம் விருப்பத்தைத் தெரிவிக்காமலேயே இருக்கிறோம். ஒரு நாள் அனைத்தும் கைமீறிப் போய்விடுகின்றன.

சொல்லி மறுக்கப்பட்ட வலியைவிட, சொல்லாமலேயே கை நழுவிப் போன விருப்பம் நம்மோடு இறுதிவரை வந்துகொண்டே இருக்கும். இதை மட்டும் மனதில் நிறுத்தினாலே, நாம் பல வேளைகளில் மனதில் உள்ளதை வெளிப்படுத்திவிடுவோம். காரணம், உணர்வுச் சுமைகளைத் தாங்கிக்கொள்ளும் வலிமையைவிட, விருப்பத்தைத் தெரிவிப்பது எளிதானது.

தயக்கம் என்ற சொல் சாதாரணமானது, ஆனால் நம் வாழ்வின் போக்கையே மாற்றக்கூடியது. சரி, அப்படியென்றால் என்ன செய்யலாம்? முதலில், தோல்விக்கும், மறுப்புக்கும் நாம் கொள்ளும் பயத்தை போக்க வேண்டும். தோற்பதும், ஜெயிப்பதும் நம்மை மட்டுமே சார்ந்தது. அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது. சொல்லப் போனால், நாம் ஜெயித்ததாக நினைக்கும் பல வேளைகளில் நாம் உண்மையில் தோற்றிருப்போம். எனவே, இந்த எண்ணத்தைக் கண்டுகொள்ளாமல், மனதில் உள்ளதை வெளிப்படுத்த வேண்டும். அது காதலாகட்டும், அன்பாகட்டும், நட்பாகட்டும், சொத்துப் பிரச்சினையாகட்டும், வேலையிலுள்ள அதிருப்தியாகட்டும், எதுவானாலும் அந்த ஒரு நிமிட பயத்தைப் போக்கிவிட்டுச் சொல்லிவிடுங்கள். அதன் பிறகு நடப்பதைப் பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை நமக்குச் சாதகமாகக்கூடச் செயல்கள் நடக்கலாமே!

தயக்கத்திற்கான இரண்டாவது மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றித் தனியாகவே பேச வேண்டும்!

எழுதித்தான் பாருங்களேன்!

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon