மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

என்ஜிகே: சூர்யாவின் அரசியல் முழக்கம்!

என்ஜிகே: சூர்யாவின் அரசியல் முழக்கம்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள என்ஜிகே படத்தில் இடம்பெற்றுள்ள தண்டல்காரன் லிரிக் வீடியோ நேற்று மாலை (ஏப்ரல் 12) வெளியாகி வைரலாகி வருகிறது.

சூர்யா முதன் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், மன்சூர் அலி கான், குரு சோமசுந்தரம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி என்றாலே பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் வந்துள்ளது தண்டல்காரன். கபிலன் வரிகளில், ரஞ்சித் பாடியிருக்கிறார்.

‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ என்று துவக்கதிலேயே வரிகள் ஈர்க்கின்றன. பாடல் வரிகள் முழுக்க அரசியல் கேள்விகளாகவும், நாட்டு நிலைமையின் மீதான ஆதங்கமாகவும் இருக்கின்றன. வரிகளின் முக்கியத்துவம் அறிந்து யுவன் சங்கர் ராஜாவும் அதற்கு வலிமை சேர்ப்பது போல இசையமத்திருப்பது நன்றாக அமைந்துள்ளது.

முக்கியமான பாடல் வரிகளாக ‘நாட்டாமையின் கையில் நாடே கெட்டு போச்சு’, ‘ஆதார் அட்டை இல்லாம ஆட்சி செய்ய வந்துட்டானே’, ‘ஊரு சேரி ஒண்ணா இல்லையே நம்ம நாட்டில், ‘காதல் செஞ்சவன கொல்லுறானே நடு ரோட்டில்’ போன்றவை உள்ளன. சமகால நிகழ்வுகளை நினைவுபடுத்துவது போல அமைந்துள்ள இப்பாடல் தேர்தல் நேரத்தில் வெளியாகி கவனம் ஈர்க்கிறது.

மே 31ஆம் தேதி ரிலீஸாகயிருக்கும் இப்படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட உள்ளது.

தண்டல்காரன் லிரிக் வீடியோ

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon