மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

பள்ளிவாசல்: ஒரே நேரத்தில் வாக்குசேகரித்த வேட்பாளர்கள்!

பள்ளிவாசல்: ஒரே நேரத்தில் வாக்குசேகரித்த வேட்பாளர்கள்!

தஞ்சை பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நிற்கக்கூட நேரமில்லாமல் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிரச்சாரங்களின்போது நிகழும் சுவையான மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களும் வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தஞ்சை சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் காந்தி, திமுக சார்பில் நீலமேகம், அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ரங்கசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மும்முரமாக வாக்கு சேகரித்துவருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை ஆற்றங்கரை அருகேயுள்ள ஜும்மா பள்ளிவாசலில் நேற்று (ஏப்ரல் 12) மதியம் இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து வெளியே வந்துகொண்டிருந்தனர். அப்போது அதிமுக காந்தி, திமுக நீலமேகம், அமமுக ரங்கசாமி ஆகிய மூவரும் தங்களது கட்சி நிர்வாகிகளுடன் அங்கு அடுத்தடுத்து அணிவகுத்து நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஒரே நேரத்தில் மூன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க நின்றதால் யாருக்கு வாக்களிப்பதாக சொல்வது என வாக்காளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும் மூவரிடமும் தனித்தனியாக வாக்களிக்கிறோம் என்று சமாளித்தபடி விடைபெற்றுச் சென்றனர்.

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon