மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

லக்னோ தொகுதியில் மோடியின் டூப்ளிகேட்!

லக்னோ தொகுதியில் மோடியின் டூப்ளிகேட்!

மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதியில் மனு தாக்கல் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடியைப் போலத் தோற்றம் கொண்ட அபிநந்தன் பதக்.

பிரதமர் நரேந்திர மோடியைப் போன்ற தோற்றம் கொண்ட அபிநந்தன் பதக், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்துவருகிறார். ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு அந்தக் கட்சியில்லிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகும், தொடர்ந்து பிரதமர் மோடியைப் போல உடையணிந்து வலம் வருகிறார் அபிநந்தன்.

மோடி பேசும் வார்த்தைகளை உச்சரித்து, அவரைப் போல மிமிக்ரி செய்துவருகிறார். மித்ரோன் என்ற வார்த்தையைச் சொல்லி, மோடியைப் போன்றே பேச்சைத் தொடங்குவது இவரது வழக்கம். இந்தக் காரணத்தினாலேயே, கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தார் அபிநந்தன் பதக். சாதாரண மனிதனுக்கு பாஜக ஆட்சி எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தினால், காங்கிரஸ் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியதாகக் கூறினார்.

வாரணாசி தொகுதியிலும் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் அபிநந்தன் பதக். இதற்கான மனு தாக்கல் வரும் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சுயேச்சையாகப் போட்டியிட்டாலும், தான் வெற்றி பெற்றால் ராகுல் காந்தியை ஆதரிப்பதாகப் பேட்டியளித்திருந்தார். நேற்று (ஏப்ரல் 12) இவர் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதியில் மனு தாக்கல் செய்துள்ளார். இத்தொகுதியில் மே 6ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

சஹாரன்பூரைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக லக்னோவில் வாழ்ந்துவருகிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் பணத்தைத் தான் வசிக்கும் மானக் நகர் பகுதி மக்களே கட்டியதாகத் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் 16ஆம் தேதியன்று அபிநந்தன் லக்னோ தொகுதியில் மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது 51 வயது ஆவதாகவும், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். வங்கி சேமிப்புக் கணக்கில் 15,000 ரூபாய் இருப்பதாகவும், கைவசம் 15,000 ரூபாய் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon