மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஏப் 2019

திரையில் இணையும் ரியல் ஜோடி!

திரையில் இணையும் ரியல் ஜோடி!

சரத் குமாரும் அவரது மனைவி ராதிகாவும் பல படங்களில் கணவன், மனைவியாக நடித்திருந்தாலும் சூர்ய வம்சம் படத்திற்குப் பின் இருவரும் ஜோடி சேரவில்லை. இந்நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஜோடி மீண்டும் களமிறங்க உள்ளது.

2013 ஆம் ஆண்டு வெளியான சென்னையில் ஒருநாள் படத்தில் ராதிகாவும் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கணவன், மனைவியாக நடிக்கவில்லை. தற்போது விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் வானம் கொட்டட்டும் படத்தில் இருவரும் இணைந்து நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. தற்போது இவர்கள் கணவன் மனைவியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார்.

சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும் இயக்குநர் தனசேகரன் தனித் தனியாக கதை சொல்லியுள்ளார். கதை பிடித்துப்போக இருவரும் உடனே நடிக்க சம்மதித்துள்ளனர்.

திரைக்கதையை மணிரத்னமும் தனசேகரும் இணைந்து எழுதியுள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்தில் ப்ரீத்தா ஒளிப்பதிவாளராக இணையவுள்ளார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

வெள்ளி, 12 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon