மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

ஆந்திர தேர்தலில் மோதல்: இருவர் பலி!

ஆந்திர தேர்தலில் மோதல்: இருவர் பலி!வெற்றிநடை போடும் தமிழகம்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே நடைபெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

20 மாநிலங்களில் 91 மக்களவைத் தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 11) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திராவில் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி தொகுதிக்குட்பட்ட வீராபுரம் பகுதியில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களிடம் இரு கட்சியினரும் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கக் கூறியதையடுத்து ஏற்பட்ட கைகலப்பு மோதலில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

இருகட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதையடுத்து தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர் சித்தா பாஸ்கர் ரெட்டி பலத்த காயமடைந்திருக்கிறார். பின்னர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்திருக்கிறார். அதுபோன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தொண்டர் புல்லா ரெட்டி உயிரிழந்துள்ளார். இந்த மோதல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுதவிர கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு பகுதியில் உள்ள பொன்ன தோட்டா கிராமத்தில் இரு கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்குப் பதற்றம் நிலவியது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதுபோன்று இன்று காலை முதல் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் 15 வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதனால் பல இடங்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ணா திவேதி, ஆந்திரா முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon