மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

எனது ஆதரவு யாருக்கு? தினகரன் விளக்கம்!

எனது ஆதரவு யாருக்கு? தினகரன் விளக்கம்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றால், ஆட்சியமைப்பதற்கு எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பீர்கள் என்று தினகரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தினகரன், “திமுக எங்களின் எதிரி. அந்தக் கட்சிக்கு நாங்கள் எப்படி ஆதரவளிக்க முடியும்? அதிமுக எங்களது துரோகி. இந்தத் தேர்தலில் அதிமுகவை மக்கள் மாபெரும் தோல்வியடையச் செய்வார்கள். அதன்படி ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். மீண்டும் தேர்தல் வரும்” என்று கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தபின் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஸ்டாலின் சொல்கிறாரே என தினகரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தினகரன், “இவ்விவகாரத்தில் திமுகதான் முதலில் விசாரிக்கப்பட வேண்டும். ஏனென்றால், அம்மா மறைவுக்கு பின் அம்மாவை எங்கள் குடும்பம் கொன்றுவிட்டதாக பொய்யை கிளப்பிவிட்டதே ஸ்டாலின்தான். அவர்கள் கோயபெல்ஸ் பிரச்சாரத்தில் கெட்டிக்காரர்கள். அதற்கு பதலடியாகத்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்தார்கள்” என்று கூறினார்.

தேர்தல்களில் தினகரனுக்கென தனி ஃபார்முலா உள்ளது. இந்தத் தேர்தலில் உங்கள் ஃபார்முலா என்னவென்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன், “ஃபார்முலா என்றால் இருபது ரூபாய் ஃபார்முலாவா? நீங்கள் சுத்தி வளைத்து என்ன கேட்க வருகிறீர்கள் என எனக்கு தெரியும். இருபது ரூபாய் ஃபார்முலா என எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது.

நான் பத்து வருடங்களாக அரசியலிலேயே இல்லை. கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தேன். ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டபோது மக்கள் என்னை வெற்றிபெறச் செய்தார்கள். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவே மக்கள் விரும்புகிறார்கள். மக்களைக் கவர்வது மட்டுமே எங்களது ஃபார்முலா” என்று தெரிவித்தார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon