மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

கூட்டாட்சியை வலுப்படுத்துமா 15ஆவது நிதிக்குழுவின் நிதிப்பகிர்வு?

கூட்டாட்சியை வலுப்படுத்துமா 15ஆவது நிதிக்குழுவின் நிதிப்பகிர்வு?

2017ஆம் ஆண்டின் இறுதியில் ஒன்றிய அரசால் 15ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டு, அரசாணையில் அதன் பணி வரன்முறைகள் (Terms of Reference) வழங்கப்பட்ட உடனேயே அது தென்மாநிலங்களில் மிகப்பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது . அதற்கு முக்கியக் காரணம், 2020-21 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளில் ஒன்றியப் பகுப்பு நிதியில் (central divisible pool) இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட இருக்கும் வரித்தொகையின் அளவைத் தீர்மானிக்கும் சூத்திரம், 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் வடிவமைக்கப்படும் எனும் வரன்முறையே ஆகும்.

இந்த முடிவு, மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி முன்னேறியிருக்கும் தென்மாநிலங்களை வஞ்சித்து, அதிக மக்கள்தொகையைக் கொண்ட பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் வடமாநிலங்களுக்கு கூடுதல் நிதியை மடைமாற்றம் செய்யும் ஏற்பாடாகப் பார்க்கப் படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே, வளர்ந்த மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரிகளில், நிதிக்குழுவின் பரிந்துரையின்படி பின்தங்கியிருக்கும் மாநிலங்களுக்கு மறுபகிர்வு செய்யப்படும் தொகையின் பங்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதை அட்டவணையில் பார்க்கலாம்.

கூட்டாட்சி எனும் அரசமைப்புச் சட்டகத்திற்குள் இயங்கி வருவதால், பின்தங்கிய மாநிலங்களும் முன்னேறிய மாநிலங்களின் வளர்ச்சியை எட்டிப்பிடிக்க அவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவது முற்போக்கான கொள்கைமுடிவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால், வளர்ந்த மாநிலங்கள் சந்திக்கவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கும் தேவையான தொகையை நிதிப்பகிர்வுக்கான சூத்திரம் வடிவமைக்கும்போது நிதிக்குழு கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே தென்மாநிலங்கள் போன்ற வளர்ந்த மாநிலங்களின் கோரிக்கை. அவ்வாறு செய்தால் மட்டுமே மாநிலங்களுக்கு இடையே கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையை வலுப்படுத்த முடியும்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon