மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

கண்களால் பேசி வாக்கு சேகரிப்பேன்: கமல்ஹாசன்

கண்களால் பேசி வாக்கு சேகரிப்பேன்: கமல்ஹாசன்

தனக்கு பல இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆரணி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஷாஜியை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்ய வந்த கமல்ஹாசனுக்கு, ஆரணி நகருக்குள் வாக்கு சேகரிக்க போலீஸார் அனுமதி வழங்காதது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் பயணித்த கமல்ஹாசன், தொண்டர்களிடம் சைகை மூலம் வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில் கடலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு கேட்டு கடலூர் உழவர் சந்தை அருகே கமல்ஹாசன் இன்று (ஏப்ரல் 11) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “பல இடங்களில் பேச எனக்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த வெயிலில் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். வாக்கு கேட்டு தெருக்களில் செல்லலாம் ஆனால் பேசக்கூடாது என்கிறார்கள். எனக்குத் தெரிந்த நடிப்புத் திறமையை வைத்து கண்ணால் பேசுவேன். மக்களுக்குப் புரிந்துவிடும்” என்று தெரிவித்தார்.

பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் துறையினரிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் பேசிய கமல்ஹாசன், “இந்த கூட்டம் சிறப்பாக நடக்க உதவிக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு நன்றி. அவர்களும் மனிதர்கள்தான். அவர்களை ஏவல் துறையாக்காமல் காவல் துறையாகவே வைத்திருப்பது அரசின் கடமை. தொப்பி இருக்கும்வரை சுயமாக யோசிக்கக் கூடாது என்ற ஆணை உங்களுக்கு இருக்கும். அதனால் ஓட்டுப்போடும்போது தொப்பியைக் கழட்டிவைத்துவிட்டு மக்களுக்கு எது தேவை என்று யோசித்துப் பாருங்கள். தன்னால் உங்கள் கண் முன் பளிச்சிடும்” என்று டார்ச் லைட்டை காட்டிப் பேசினார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon