மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

அதிமுக அரசு விரைவில் கவிழும்: இ.பெரியசாமி

அதிமுக அரசு விரைவில் கவிழும்: இ.பெரியசாமி

அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரும் வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது என்றும், இதனால் அதிமுக அரசு கவிழும் என்றும் திண்டுக்கல்லில் நடந்த பிரசாரத்தில் தெரிவித்துள்ளார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக – பாஜக கூட்டணி சார்பாக பாமகவைச் சேர்ந்த ஜோதிமுத்துவும், திமுக சார்பாக ப.வேலுச்சாமியும், அமமுக சார்பாக ஜோதிமுருகனும், மக்கள் நீதி மய்யம் சார்பாக எஸ்.சுதாகரும், நாம் தமிழர் கட்சி சார்பாக மன்சூர் அலிகானும் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து, நேற்று (ஏப்ரல் 10) திமுக துணைப் பொதுச்செயலாளரும் ஆத்தூர் தொகுதி எம்எல்வுமான இ.பெரியசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். பூதிப்புரம், உண்டார்பட்டி, விராலிப்பட்டி, காப்பிளியபட்டி, மறவப்பட்டி, தாடிக்கொம்பு ஆகிய பகுதிகளில் திரண்ட மக்களிடையே பேசினார். இந்த பிரச்சாரத்தின்போது திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், பேருராட்சிப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று பிரச்சாரத்தின்போது கூறினார் இ.பெரியசாமி. இத்திட்டத்துக்கான பணி நாட்களை 150 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். விவசாயிகளுக்கு மத்திய பாஜக அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை என்றும், 15 தொழிலதிபர்களுக்காக மட்டும் ரூ.5 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்தது என்றும் தெரிவித்தார்.

“தமிழகத்தில் நடைபெறவுள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக பெரும்பான்மை பெறும். அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. அப்போது அதிமுக அரசு கவிழும். விரைவில், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார்” என்று அவர் கூறினார்.

“காங்கிரஸ் கட்சி அமைந்தவுடன், தமிழகத்தைச் சேர்ந்த 2 லட்சம் இளைஞர்கள் உட்பட இந்தியா முழுவதும் 2 கோடி பேர் சாலைப்பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவர். 60 வயதானவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களுக்கு மாதம்தோறும் ரூ.6,000 வழங்கப்படும். கிராமப்புற பெண்களுக்கு 50,000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார் ஐ.பெரியசாமி.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon