மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

தேர்தல் களத்தில் முதல்வரின் மச்சான்!

தேர்தல் களத்தில் முதல்வரின் மச்சான்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மச்சான் இப்போது தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார்.

ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க இருக்கும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் சேலம் உள்ளிட்ட சில மக்களவைத் தொகுதிகளில் வெல்வதையும் அவர் இமேஜ் பிரச்சினையாக கருதுகிறார். அதனால் ஒவ்வொரு கிளைச் செயலாளரையும் அழைத்துக் கொண்டு வீடுவீடாக போய் திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும். மிடில் கிளாஸ் மக்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் போய் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் பற்றியும், தொடர்ந்து அவை வரும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வீக் ஆன பகுதிகளில் திண்ணைப் பிரசாரம் செய்ய உத்தரவு போயிருக்கிறது. இதன்படி 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளிலும் திண்ணைப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர் அதிமுகவினர்.

இந்த நிலையில் நாமக்கல், சேலம் மக்களவைத் தொகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷ் காளியண்ணன் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இவர் திண்ணைப் பிரசாரம் மட்டுமன்றி பொது இடங்களுக்கும் கட்சி கூட்டணிக் கட்சி நிர்வாகிகளோடு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவின் கடைசி தம்பி வெங்கடாசலம் என்கிற வெங்கடேஷ் காளியண்ணன். இவர் சங்ககிரி ஒன்றிய மாணவரணிச் செயலாளராக ஜெயலலிதா காலத்தில் இருந்தே பணியாற்றி வருகிறார்.

இந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்துக்காக சேலத்தை விட்டு வெளியே செல்லும் நிலையில் அவரது உத்தரவின் பேரில் பல பணிகளைச் செய்து வருகிறார் அவரது மச்சான் வெங்கடேஷ். குறிப்பாக எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுகவின் ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை ,தேர்தல் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்ட வெங்கடேஷ், சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி தேர்தல் அலுவலகத்துக்கும் அடிக்கடி வந்து போகிறார்.

நேற்று (ஏப்ரல் 10) நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட சேவூர், அரசிராமணி, சேலம் தொகுதிக்குட்பட்ட பார்டர் ஏரியாக்களிலும் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வெங்கடேஷ். அவருடன் சங்ககிரி ஒன்றிய செயலாளர் டிஎமெஸ் ரத்தினம் பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், அதிமுக கூட்டணிக் கட்சி நிவாகிகளும் பங்கேற்றனர். அப்போது சட்டையில் எடப்பாடி பழனிசாமியின் படத்தையே அடையாளமாக குத்தியிருந்தனர்.

முதல்வரின் மச்சான் என்ற பந்தா இல்லாமல் கட்சியின் அனைத்து நிர்வாகிகளோடும், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளோடும் கலந்துபேசி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் வெங்கடேஷ் காளியண்ணன் என்கிறார்கள் சேலம் அதிமுகவினர்.

மலையேறவேண்டுமென்றாலும் மச்சான் தயவு வேண்டுமென்பார்களே...

-ராகவேந்திரா

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon