மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

ஆந்திரப் பிரதேசத் தேர்தல் களம்: சூறாவளி மாற்றம்!

ஆந்திரப் பிரதேசத் தேர்தல் களம்: சூறாவளி மாற்றம்!

டி.எஸ்.எஸ்.மணி

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 11) வாக்குப் பதிவு. 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 170 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கிறது.

ஆளுங்கட்சியின் மீதான கோபம்

ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திபாபு நாயுடு குடும்பத்தார் அமராவதி நகர் என்ற மாநிலத் தலைமைப் பீடத்தைக் கட்டி எழுப்ப குண்டூர் விஜயவாடா கிழக்கு கோதாவரி மாவட்ட சிறு குறு நடுத்தர விவசாயிகளின் விவசாய சாகுபடி நிலங்களைப் பறித்ததால் அவர்கள் அரசின் மீது கோபமாக உள்ளனர். அமராவதி நகருக்காக அரசு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை வெளியுடுவதற்கு முன்பே மேற்கண்ட மாவட்டங்களில் குறைந்த விலைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை முதல்வர் நாயுடு குடும்பத்தார் வாங்கிவிட்டார்கள். அரசு நிலத்தைக் கையகப்படுத்தும்போது அதற்காகப் பல கோடி ரூபாய் நஷ்ட ஈடாகப் பெற்றுவிட்டனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது ஆட்சி மீது மேலும் கோபத்தைக் கிளப்பியுள்ளது.

நாயுடுவின் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. செம்மரக் கடத்தலில் ஈடுபடும் தனியாரை ஒடுக்கிவிட்டு நாயுடு ஆட்சியே செம்மரக் கடத்தலைப் பெரிய அளவில் நடத்துவதாகக் கூறப்படுகிறது. செம்மரத்தைச் சட்ட விரோதமாக சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் கடத்தி அதனால் வரும் பணத்தை அந்த நாடுகளின் மூலதனம் என்ற பெயரில் அமராவதி நகரைக் கட்டி எழுப்பப் பயன்படுத்திவந்தார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

தமிழ்நாட்டின் தெற்குக் கடற்கரையோரம் நடந்துவந்த சட்ட விரோத தாது மணல் கொள்ளைக்குத் தடை வந்த பிறகு நாயுடு அரசு ஆந்திரக் கடற்கரையோரம் தனியாருடன் சேர்ந்து தாதுமணல் சுரங்கங்களைச் சட்ட விரோதமாகத் தொடங்கி கார்னெட் தொடங்கி மோனசைட் வரை கடத்தியதென்றும் குற்றச்சாட்டு உள்ளது. அதற்காகவே நடுவண் அரசின் சுரங்க அமைச்சக இணை இயக்குனர் பிறப்பித்த அணுசக்தி மணல் எடுக்கத் தடை என்ற உத்தரவைத் திரும்பப் பெற நாயுடு பிரயாசைப்பட்டார் என்பதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

விசாகப்பட்டினத்தில் சர்வதேச விமான நிலையம் கட்ட விவசாயிகளின் பசுமை நிலங்களை நாயுடு அரசாங்கம் கைப்பற்றுகிறது. அதை எதிர்த்து விவசாயிகள் நீதிமன்றம் சென்றுள்ளனர் . வழக்கு நிலுவையில் இருக்கும்போதே விமான நிலையக் கட்டுமானத்தை நாயுடு அரசு தொடர்கிறது.

ஜெகன் மோகன் ரெட்டியின் கை ஓங்குகிறது

இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, தெலுங்கு தேசம் கட்சியில் தேர்தலில் நிற்க இடம் கிடைக்காத பல பிரமுகர்கள் கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். கட்சியில் சேர்ந்துள்ளதும் நாயுடுவைப் பலவீனப்படுத்தியுள்ளது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டியின் கை ஓங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் கோட்டையான விசாகப்பட்டினம்கூட ஜெகன் மோகனைக் கொண்டாடுகிறது.ஜெகன் மோகன் கட்சி ஆட்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாமல் நாயுடு காவல் துறை நெருக்கடி கொடுப்பதாகவும், தெலுங்கு தேசம் கட்சியால் வாக்குக்கு ரூ. 400 எனக் கொடுக்க முடிகிறது என்றும் மக்கள் கூறுகிறார்கள்.

10 கடலோர மாவட்டங்களில் குறிப்பாக குண்டூர் விஜயவாடா கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் இருக்கும் காப்பு நாயக்கர்கள் பெரும்பாலோர் அவர்களது கட்சியான நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் கட்சியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு முன்னாள் தலைமைச் செயலாளர் ‘ரெய்டு புகழ்’ ராம்மோகன் ராவ் சாதி உறவில் பவன் கல்யாண் கட்சியில் ஆலோசகராக உள்ளார். அந்தக் கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு ஆதரவாகவே உள்ளது.

ஜெகன் மோகன், 25 மக்களவைத் தொகுதிகளில் 18இல் வெல்வார் என்றும் 170 சட்டமன்றத் தொகுதிகளில் 170இல் 116 ஐத் தாண்டுவார் எனவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon