மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

தருமபுரி: பிரச்சாரத்தில் கண்ணீர்விட்ட அன்புமணி

தருமபுரி: பிரச்சாரத்தில் கண்ணீர்விட்ட அன்புமணி

தருமபுரி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அன்புமணி கண்கலங்கி அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்ற தருமபுரி தொகுதியில் சமுதாய பலத்தாலும் திண்ணைப் பிரச்சாரத்தை முன்வைத்தும் வெற்றிபெற்றவர் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். வரும் மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தருமபுரி தொகுதியில் களம் காண்கிறார். அன்புமணி பிரச்சாரம் செய்யும் இடங்களில் சர்ச்சை சம்பவங்களும், அதிரடி பேச்சுக்களும் அரங்கேறுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு (ஏப்ரல் 10) தருமபுரி தொகுதிக்குட்பட்ட கடகத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அன்புமணி சென்றுக் கொண்டிருந்த போது, அவரின் வாகனத்தை பார்த்த சிறுவர்கள் பின்னால் ஓடி வந்துள்ளனர்.இதனை கண்ட அன்புமணி வாகனத்தை நிறுத்தி மாணவர்களிடம் பேசியுள்ளார். அப்போது அங்கு பொதுமக்கள் அதிகளவில் கூடவே, அவர்கள் மத்தியில் பேச நினைத்த அன்புமணி தன்னையும் அறியாமல், கூட்டத்தின் நடுவே உடைந்து அழுதுள்ளார்.

“இந்த ஊரிலுள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் என்னை சிறப்பாக வரவேற்றீர்கள். இவ்வளவு பாசம் வைத்துள்ள மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று அழுதுகொண்டே பேசியுள்ளார். இச்சம்பவம் அங்கு கூடி நின்ற பொது மக்களையும் கண்கலங்க செய்தது. அவர்களும், ‘ஐயா, ஐயா’ என்று முழக்கமிட்டனர். அன்புமணி பேசும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon