மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கக் கூடாது: பூவுலகின் நண்பர்கள்!

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கக் கூடாது: பூவுலகின் நண்பர்கள்!

டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் உரிமத்தை வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

காவிரிப்படுகையில் நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடல்பகுதி சேர்த்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும் தலா இரண்டு மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் உரிமத்தை மத்திய பெட்ரோலியத்துறை கடந்த ஆண்டு வழங்கியிருந்தது.

இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஒ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளது. வேதாந்த நிறுவனம் 274 கிணறுகளையும் , ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 67 கிணறுகளையும் அமைக்கிறது. இதில் ஒ.என்.ஜி.சி. அமைக்கவுள்ள 27 கிணறுகளுக்கு முதற்கட்டமாக சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இன்று (ஏப்ரல் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல அரசியல், விவசாய, சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில் தமிழக அரசு இத்திட்டங்கள் எளிதில் வருவதற்கு ஏதுவாக கடந்த ஆண்டே மத்திய அரசு விதியில்.மாற்றம் கொண்டு வரும் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த மக்களின் கருத்துக் கேட்பு இல்லாமலே சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, “தமிழகத்தில் பருவமழை தொடர்ச்சியாக பொய்த்து வரும் நிலையில் விவசாயிகள் பெரும் வாழ்வாதார சிக்கலில் தவித்து வருகின்றனர் இந்த நிலையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த மத்திய அரசின் உதவியுடன் வேதாந்தா நிறுவனம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் முயன்று வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் இந்த முயற்சி கடும் கண்டனத்துக்குரியது” என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,

புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை டெல்டா பகுதிகளில் செயல்படுத்துவது தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பே கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது. அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து இம்முயற்சியை தடுக்காவிட்டால் காவேரி டெல்டா அழிவதை நம் தலைமுறை அல்ல நம் கண்முன்னே காணும் நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon