மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

ஹாரரை விடாத தமிழ் சினிமா!

ஹாரரை விடாத தமிழ் சினிமா!

சண்டிமுனி என்ற ஹாரர் த்ரில்லரை இயக்கி கொண்டிருக்கும் மில்கா எஸ்.செல்வகுமார், அடுத்ததாக பியார் என்ற மற்றொரு பேய் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எப்போதும் மார்க்கெட் இழக்காத ஜானராக வலம் வருவது ஹாரர் திரைப்படங்களே. அதில் வகை பிரித்து ஹாரர் காமெடி, ஹாரர் அடல்ட் காமெடி, ஹாரர் பக்தி, ஹாரர் த்ரில்லர், ஹாரர் மசாலா, ஹாரர் காதல் என எப்படியெல்லாம் அந்த ஜானருக்கு சுவாரஸ்யம் ஏற்ற முடியுமோ அதையெல்லாம் செய்து ரசிகர்களை கவர முயல்கின்றனர் இயக்குநர்கள்.

இவ்வருட தொடக்கத்திலிருந்து ஹாரர் சப்ஜெக்ட்டில் மட்டும் தில்லுக்கு துட்டு 2, களவு, பொட்டு, ஐரா உட்பட எட்டு படங்களுக்கு மேல் வெளியாகின. அதில் தில்லுக்கு துட்டு 2 மட்டுமே ரசிகர்களை ஈர்த்தது. ஆனாலும் ஹாரர் மீதுள்ள மோகம் இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் விடுவதில்லை.

ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றிய மில்கா எஸ்.செல்வகுமார், நட்ராஜ், மனிஷா யாதவ் நடிக்க சண்டிமுனி என்ற படத்தை இயக்கி வருகிறார். பணிகள் நிறைவடையும் தருவாயிலுள்ள இப்படம் வெளிவரும் முன்னரே தனது இரண்டாவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விண்டோபாய் பிக்சர்ஸ் V.பாலகிருஷ்ணன், R.சோமசுந்தரம் மற்றும் மாரிசன் மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். முன்னணி நடிகர் ஒருவரை கதாநாயகனாகவும் முன்னணி நாயகி ஒருவரை கதாநாயகியாகவும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். மற்றும் சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ஷபிபாபு ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர்களிடம் படம் பற்றி இயக்குநர் பேசும் போது, “வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத்தான் சேர்த்து வைப்பார். இந்த படத்தில் வித்தியாசமாக ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார். அதாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க்காதல் என்றும் சொல்லலாம்” என கூறியுள்ளார்.

ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. ஊட்டி, குன்னூர், பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே அடுத்த படம் கமிட்டானது எப்படி என்று இயக்குநரிடம் கேட்ட போது “சண்டி முனி படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளரிடம் சொன்னது போல் முடித்துக் கொடுத்ததை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் என்னை பியார் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கும் நான் திட்டமிட்டு சொன்ன படி முடித்துக் கொடுப்பேன்” என்கிறார் மில்கா எஸ்.செல்வகுமார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் வாட்ச் மேன், பிரபு தேவா தமன்னா நடிக்கும் தேவி 2, ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3 ஆகியவை அடுத்தடுத்து இதே ஜானரில் படங்கள் வெளியாகவுள்ளன.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon